Friday, September 27, 2013

விண்வெளி விண்வெளி

         
                   கி.பி.2100
அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. அந்த விண்வெளி ஓடத்தை இருவர்  செலுத்திக் கொண்டிருந்தனர்.
           ‘’நண்பா நமது பயணம் எப்போது முடியும்?
            ‘’இன்னும் நான்கு புதிய கிரகங்களில் இறங்கி ஆய்வுசெய்து நமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?’’
             ‘’அப்படியானால் இன்னும் நான்கு மாதங்கள் ஆகிவிடும்’’
              ‘’அதோ ஒரு புதிய கிரகம் தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போம்’’
              விண்வெளி ஓடம் மெதுவாக அந்த புதிய கிரகத்தை நெருங்கியது.பெரும்பகுதி நீரால் சூழப்பட்டிருந்த அந்த கிரகத்தை சுற்றி வந்தது.
           ‘’தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளது. இன்னும் தாழ்வாக பறந்து பார்க்கலாம்’’
          ‘’அதற்கு முன் தற்காப்புகான ஆயுதங்களை அலெர்ட் செய்துகொள்வோம். எப்படிப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியாதல்லவா?’’
‘’சரியாகச் சொன்னாய்’’
     அனைத்தையும் ஆயத்தம் செய்துவிட்டு கிரகத்தின் நிலப்பகுதியில் தாழ்வாகப் பறக்கத் தொடங்கினார்கள்.
     நிலப்பகுதி முழுவதும் மிகப்பெரிய கட்டிடங்கள்,உயர்ந்த கோபுரங்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிதிலமடைந்துபோய் கிடந்தன. உயிரினங்கள் ஒன்றையும் காணோம். ஆச்சிரியப்பட்டுப் போனார்கள்.
           ‘’சமீப காலத்தில்தான் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கின்றன போலும்’’
             ‘’’ஆம் அப்படித்தான் தெரிகிறது. தரையிறங்கி பார்ப்போமா?
             திடீரென்று விண்வெளி ஓடத்தில் அபாய விளக்கு சிகப்பு நிறத்தில் எரிந்தது. அபாய ஒலியும் ஒலித்தது
              கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் ஒலித்தது.
              ‘’கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுகிறேன் நீங்கள் மிகவும் ஆபத்தான கிரகத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். உடனே வெளியெறவும்’’
               .’’ஏன் என்ன விசயம்’’ 
  ‘’’ அதீத விஞ்ஞான வளர்ச்சியால்  சுற்றுச்சூழல் மாசுப்பட்டு அங்கே வாழ்ந்த உயரினங்களெல்லாம் அழிந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான ரசாயன வாயுக்களும்,கதிரியியக்கமும் கிரகம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன.உடனே வெளியேறவும்.’’
               ‘’அப்படியா இந்தக் கிரகத்தின் பெயர் என்ன?’’

                                                ‘’ பூமி.

Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது.
தண்ணீர் இன்று காசு கொட்டும் முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. எங்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
முறையான தரச்சான்று இல்லாமல் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் அதை அரசு அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
ஒழுங்காக முறையாக சுத்திகரிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் உயிரற்ற நீர்தான் என்றும் இயற்கையான தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள் நீக்கப்படுவதாலும்,நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாலும் உடல் ஆரோக்கியத்து கேடு என்றும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
  இந்நிலையில், அம்மா வாட்டர் என்ற பெயரில் அரசு தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அரசின் கடமை என்ன?  நீதி, நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டியது ஒரு அரசின் பொறுப்பு ஆகும். அதை விடுத்து அரசே தண்ணீர் வணிகத்தில் ஈடுபடுவது தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முறையற்ற செயலாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் உயர் அழுத்தத்தில் அரசு வழங்குகிறது. நாம் அந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை.
வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும் நிலையில், புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து, புதிய திட்டங்களை தீட்டி அதில் முதலீடு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அதற்காக பெருமைப்படலாம்.
அதைவிடுத்து நாங்களே குறைந்த விலைக்கு தண்ணீர் தருகிறோம் என்று கூறுவது வெட்கப்படவேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே ஒரு தண்ணீர் விற்பனையில் அரசு அதிகம் சம்பாதித்து வருவதால் இந்த தண்ணீர் விற்பனையிலும் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணமா இல்லை நமது குடிமகன்கள் மதுவில் கலப்பதற்கு அதிக விலை கொடுத்து ‘வாட்டர் பாக்கெட்’ வாங்கி கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் மலிவு விலையில் தண்ணீர் கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணமா தெரியவில்லை.
அரசு மது பார்களில் அம்மா வாட்டர் விற்கப்படுகிறதா அங்கு என்னவிலை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுவார்களாக!

Sunday, June 30, 2013

குறுங்கவிதைகள்

*புற்றுநோய்க்கு பயந்து
 புகையை கைவிட்டது
 மின்சார ரயில்!
*துருப்பிடித்து தவமிருக்கிறது
 செல்போன் அழியட்டும் என்று
 தபால்பெட்டி!
*எப்படியும் தேடி வருவார்கள் என்று
 நம்பிக்கையோடு மூலையில்
 முடங்கிக்கிறது குடை!
*அருவி கருமையாக கொட்டுமோ
 உன் கூந்தல்?
*இலக்கியம் பேசுகின்றன உன் விழிகள்!
  இலக்கணம் மீறத்துடிக்கிறது என் மனம்!
*கடற்கரையில் காதல்
 ஒரு சுண்டல் பொட்டலம் தின்று முடிக்கும் நேரத்தில்
 கசக்கி எறியப்படுகிறது அந்த காகிதத்தைப்போல இன்று!
 ஒரு அலை வந்து திரும்பிச்செல்லும் நேரத்தில் மறைந்துவிடும் நாளை!
*பனிமூடிக்கிடக்கிறாயே என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்துவிட்டோம்
 உள்ளே உன் தேகம் கொதிப்பேறிக் கிடக்கிறது என்பதை அறியாமல்!
*காதோரம் வெண்மை!
 குன்றாத கற்பனை! குறையாத எழுத்துக்கள்!
 உருமாறும் பாத்திரங்கள் சமையலறையில்!
*அழகிய கணணியால் பத்து விரலும் பேனாவாய் மாறினாலும்
 ஒழுகிய பேனாவால் பத்துவிரலும் மைபூசியது மறக்குமோ?
*மிதித்தாலும் சுமக்கின்றது
  சைககிள்!
*நதியை பெண்ணென்று வைத்தது
 அதன் துகில் உரித்திடத்தானோ
 மணல்கொள்ளையர்களே?
*அன்பே நம் காதலில் எதிரிகள் யாருமில்லை
 என்றிருந்தேன் நீயே எதிரியாவாய் என்றறியாமல்!
*வெள்ளை எறும்புகள்
 ஒன்றன் பின் ஒன்றாக
 சாலையின் நடுவே கோடுகள்!
*கண்ணீரை சிந்தியபடி செல்கின்றன
 தாயை பிரிந்த சோகத்தில்
 ஆற்றின் குழந்தைகள் மணல் லாரிகளில்!

Sunday, June 2, 2013

ஆழி மழையும் அம்மாவின் மிக்ஸியும்
“அழிமழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்து கொடார்தேறி
ஊழி முதல்வனுருவம் போல் மெய்கறுத்துப்
பாழியந் தோளுடைப் பற்பநாபன் கையில்
அழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழதே சார்ங்க முதைத்த சரமழை போல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலொரெம்பாவாய்”

இது திருப்பாவை என்னும் நூலில் உள்ள பழைய தமிழ்ப்பாடலாகும்.  இந்தப் பாடலில் கடலிருந்து நீர் முகரப்பட்டு மேலே சென்று மேகமாய் மாறி மழையாய் பொழிகின்றது என்ற கருத்து கூறப்பட்டுள்ளது.  இதிலிருந்து தெரிவது என்னவென்றால் கடலிலிருந்து நீர் ஆவியாகி மேகமாய் மாறி மழையாய் பொழிவதை நவீன அறிவியல் உலகம் அறிந்து கொள்வதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே தமிழன் அறிந்து வைத்துள்ளான் என்று புரிகின்றது.  இலக்கியத்தில் மட்டுமல்ல விஞ்ஞானத்திலும் தமிழன் சிறந்து விளங்கினான்……..

மீண்டும்  மீண்டும் மனப்பாடம் செய்து கொண்டிருந்த தங்கம் இடையிடையே தன் தாய் பேச்சியம்மாளின் முகத்தை கவனித்துக் கொண்டாள்.

பேச்சியம்மாள். மெலிந்த தேகத்தில் முப்பது வயதக்குரிய இளமையின் வனப்புகள் ஏதுமில்லை.  இரண்டு தேங்காய்த் துண்டுகள் இரண்டு வற்றல் கொஞ்சம் உப்பு சேர்த்து அம்மியில் வைத்து நசுக்கிக் கொண்டிருந்தாள்.  மதிய உணவுக்கு துவையலும் ரசமும் தான்.

“அம்மா” மெதுவாக ஆரம்பித்தார் தங்கம் “என்னடி?”  

“திங்கட்கிழமைக்குள்ள எப்படியாவது வாங்கித் தந்துருவியா?”

“இவ ஒரு புளுபுளுத்தா! நாலு நாளா என் ஆவிய போட்டு எடுத்துக்கிட்டே இருக்கா! நாந்தான் வாங்கித்தாரேன்னு சொல்லிட்டன்லா? பேசாம இரியேன்”

“அது இல்லம்மா திங்கக்கிழமை சாநய்திரம் எங்க ஸ்கூல்ல ஆண்டு விழா.  ஆதில நா மேடையேறி பேசப் போறேன் அதுக்காவது போட்டு போவணும்னு ஆசயா இருக்கும்மா”

“இங்க பாரு முத்தய்யா அண்ணாச்சி சாயத்திரம் ரூபாய் கொண்டு வாரேன்னுருக்காரு நாளக்கி காலயில மொத வேலயா கொலுசுக்கடக்கி போயி வாங்கித்தந்துருதேன்”

“அம்மா நாளக்கி ஞாயிற்றுக்கிழமை நம்ம ஊரு கொலுசுக்கட லீவு. அவுங்க வேதம்லா?”

“நம்ம ஊருல இல்லன்னா என்ன? ஏரலுக்கு போயி வாங்கித் தாரேன்”.

“சரிம்மா” சந்தோசமாக கூறிவிட்டு விளையாட வெளியே சென்றாள் தங்கம்.  பேச்சியம்மாளுக்கு ஆற்றாமையால் நெஞ்சு முட்டிக் கொண்டு வந்தது.  சின்னபிள்ளை அதுக்கு என்ன தெரியும் பாவம் கூட படிக்கிற புள்ளைங்கல்லாம் கம்மல்ää கொலுசு போட்டு அழவு காமிக்கும் போது இவளுக்கும் ஆசை வரத்தானே செய்யும். ஆவ அப்பன் கோபாலு ஒரு குடிகாரப்பய அவன் ஒரு நாள் வேலபாத்துட்டு வந்தா ஒம்பது நாள் குடிச்சிட்டு கெடப்பான்.  அவனால ஒரு பிரயோசனுமும் இல்ல நான்தான் நாலு எடத்துல வேலபார்த்து கதய ஓட்டுதேன். நானும் நாளு மாசமா ஒரு கொலுசு வாங்கி குடுத்திரனும்னு நெனச்சிட்டுதானிருக்கேன்! முயடியல! ஓவ்வொரு செலவா வந்திருது.  சித்திர மாசம் கோயில் கொட.  அதுக்கு ஒரு பாடு செலவு.  வைகாசியில அண்ண மகா உக்காந்துட்டா! அதுக்கு சீரு செனத்தியின்னு ஏகமா ஆச்சுää போன மாசம் புருசனுக்கு உடம்பு சரியில்லாம போச்சுää அது குடியால வந்த கொழுத்துப் போன செலவு. ஓவ்வொண்ணுக்கும் சிட்ட வாங்கித்தான் சமாளிக்கேன். மேலத்தெரு பாலு அண்ணாச்சிதான் தருவாரு. இரண்டாயிரத்துக்கு நானூறு புடிச்சிக்கிட்டு ஆயிரத்து அருநூறு வாங்கினா நூறு நாள் இருபது ரூபாய் கட்டணும்.  இப்பவே மூணு சிட்ட ஓடுது.  இந்த நெலமயில கொலுசு வாங்க பணத்துக்கு எங்க போவேன் வேற வழயில்லாமத்தான் முத்தையா அண்ணாச்சி சொன்ன யோசனய கேட்டேன்.  தனக்குள் புலம்பியபடியே சோறு வடித்து இறக்கினாள்.  அரசு அறிவித்த இலவச பொருட்களான மிக்ஸியும்ää பேனும் சென்ற வாரம் தான் அந்த தெருவில் விநியோகிக்கப்பட்டது.  பேச்சியம்மாளுக்கும் கிடைத்தது.  அதை பயன்படுத்தாமல் ஒரு மூலையில் போட்டு வைத்திருந்தாள்.  நான்கு நாள் முன்பு சாத்தான்குளத்திலிருந்து அவளுடைய பெரியப்பா மகன் முத்தையா அவள் வீட்டிற்கு வந்த போது.

“மிக்ஸியும் ஃபேனும் சும்மாவா கெடக்கு வேணும்னா வெலக்கி குருத்துருவமா?” என்று கேட்டார்.  

“ஏன் அண்ணாச்சி அரசாங்கம் இலவலசமாக குடத்த இதயுமா வெலக்கி விக்காக?

“என்னம்மா நீ  பேசுத?

“போன தடவ இலவச டி.வி பட்டபாடு ஓனக்கு தெரியாதாங்கும்! அதே நெலமதான் இதுக்கும்! யோசிச்சு சொல்லு! ரெண்டும் சேத்து ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு போவும்.  நானே வித்து தாரேன்”      

பேச்சியம்மாளும் யோசித்து பார்த்தாள் ஏற்கனவே ஃபேன் வீட்டில் இருக்கிறது.  மிக்ஸிய ப்ளக்கில் மாட்டி அரைப்பதற்குள்ää அம்மியில் வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து விடலாம்.  இந்த ஆயிரத்து ஐநூறு கிடைத்தால் மகளுக்கு கொலுசு வாங்கி கொடுத்து விடலாம்.

“சரி அண்ணாச்சி நீங்களே வித்துக்குடுங்க” என்றாள். உடனே இரண்டு பொருட்களையும் எடுத்துக் கொண்டு சனிக்கிழமை பணத்துடன் வருவதாக சென்றான் முத்தையா.

மாலை வேளை முத்தையா பணத்தை கொண்டு தந்தார்.  அதை வாங்கி வைத்த பின்புதான் அப்பாடா கொலுசு பிரச்சினை தீர்ந்தது என்று நிம்மதி அடைந்தாள்.

மறுநாள் காலை விறுவிறுவென்று வேலைகளை முடித்தாள்.  பத்தரை மணி ஏரல் செல்லும் பஸ்சை பிடித்தால் கொலுசு வாங்கிவிட்டு மதியம் திரும்பிவிடலாம் என்று வேகமாகக் கிளம்பினாள்.
பணத்தை எடுக்க பணம் வைத்திருந்த டப்பாவிற்குள் கைவிட்டபோது பகீரென்றது.  டப்பா வெறுமையாயிருந்து.

“அடப்பாவி மனுசா புள்ளாக்கி கொலுசு வாங்க வெச்சிருந்த பணத்தையா எடுத்த? ஆத்திரம் பொங்கியது.  துக்கம் தொண்டையை அடைத்தது.  நேற்று இரவு கோபால் முழுபோதையுடன் வந்துபோது கூட சந்தேப்படவில்லை. மிகஸியையும் ஃபேனையும் விற்று கொலுசு வாங்க பணம் வைத்திருப்பது அவனுக்குத் தெரியும். ஆனாலும் மகள் விசயத்தில் விளையாட மாட்டான் என்று நினைத்தாள்.  மகள் ஆசையோடு இருப்பாளே! அவளிடம் என்ன பதில் சொல்வது கொலுசு கிடைக்காது என்று தெரிந்தால் தாங்கமாட்டாளே.  

மனதில் துயரம் பொங்க அழுது அரற்றினாள்.

சிறிது நேரத்தில் போதையுடன் வீட்டிற்கு வந்தான் கோபால்

ஆவேசத்துடன் பாய்ந்து சட்டையை பிடித்து உலுக்கினாள்.

“நீயெல்லாம் ஒரு மனுசனா?” “பெத்த புள்ளக்கி ஒரு கொலுசு வாங்கித்தர வக்கில்ல. நான் கஷ்டப்பட்டு கொஞ்சம் பணம் ரெடி பண்ணி வெச்சிருக்கேன். அத எடுத்துட்டு போயி குடிச்சிட்டு வந்திருக்கியே நீயெல்லாம் வெளங்குவியா?”

“ஏ செத்த மூதி கைய எடுடி”

மனைவியின் கையை உதறினான்.

“ஏன் இந்த நெல நிக்க? என்னமோ கஷ்டப்பட்டு ஒழச்சு சேத்து வச்சிருந்த பணத்த எடுத்த மாதிரி இந்த குதி குதிக்க? இந்த பணம் எப்படி வந்தது சொல்லுடி”

“இலவச மிக்ஸிää ஃபேன் வித்து வாங்கி வெச்சிருக்கேன்”

“அப்படிச் சொல்லு! இலவச மிகஸியும்ää ஃபேனும் அரசாங்கம் குடுக்குதே! அதுக்கு பணம் எப்படி வருது? நோட்டு அச்சடிச்சா?”

“பொறவு?”

“அடிப்போடி கூறுகெட்டவளே.  நாங்க எல்லாம் கஷ்டப்பட்டு குடிக்கிறதால வர்ற வருமானத்த வெச்சு தாண்டிää அரசாங்கம் இலவசங்கள தருது.  கடல்லேருந்து ஆவியாவற தண்ணி மேகமா மாறி நெலத்துல பெய்யுது.  அது ஆறா ஓடி வருது.  அரசாங்கம் கடல் மாதிரி நாங்கல்லாம் ஆறு மாதிரி.  அந்த கடலுக்கே தண்ணியை குடுக்கறதே நாங்க தான்! இது புரியாம கத்தறே போவியா?        

தத்துவத்தை உதிர்ந்துவிட்டு கட்டிலில் சாய்ந்தான் கோபால்.

அடுத்த வீட்டில் தன் தோழியிடம் தான் மனப்பாடம் செய்த கட்டுரைய ஒப்பித்து ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள் தங்கம்.

ஆழி மழைக்கண்ணா ஒன்றும் நீ கைகரவேல்………..
Saturday, June 1, 2013

முரண்சுவை தங்கநகை உற்பத்தி
பல வருடங்களுக்கு முன்பு முரண் சுவை என்ற தலைப்பில் நடிகர் ராஜேஷ் ஆனந்த விகடனில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார்.

கால மாற்றத்தால் நடைமுறை பழக்க வழக்கங்கள் நம்பிக்கைகள் தொழில் நுப்பங்கள் எப்படி முரணாகிப் போகின்றன என்பதே அந்த கட்டுரைகளின் கரு.

அதே பாணியில் நான் தொடர்ந்து எழுதாலாம் என்று எண்ணி இந்த பகுதியை ஆரம்பிக்கிறேன்.

முதலில் தங்க நகை உற்பத்தியில் ஏற்பட்ட ஒரு முரண்.

முன்பெல்லாம் தங்க நகைப்பட்டறைகளில் மற்ற உலோகங்களை மிகவும் கவனமாக கையாள்வாhக்ள்.  ஏனெற்றால் தப்பித்தவறி தங்கத்தில் மற்ற உலோகங்கள் கலந்து விட்டால் அதன் தரம் குறைந்து விடும் வாய்ப்பு உண்டு.  மற்றொரு விசயம் மற்ற உலோகங்கள் கலந்து விடும்போது அதன் உருகும் வெப்பநிலை குறைந்து விடும்.  குறி;ப்பிட்ட வடிவம் உருவான பின்பு காய வைக்கும் போது உருகிவிட வாய்ப்பு உண்டு.

வேலை கற்றுக் கொள்ளும் இளைஞர்கள் செம்பு அல்லது வெள்ளியிலோ தான் செய்து பார்த்து பழக வேண்டும்.  எனவே அவர்கள் வேலை குறைவான நேரம் முதலாளி ஊரில் இல்லாத சமயம் பார்த்து பழகுவார்கள்.

இருந்தாலும் செம்பு வெள்ளி ஆகிய உலோகங்கள் இல்லாமல் நகை செய்ய முடியாது. ஆனால் அதை தேவைப்படும் நேரத்தில் எடுத்து பயன்படுத்திவிட்டு பத்திரப்படுத்து விடுவார்கள்.

தேவைப்படும் உலோகங்களே இப்படி என்றால் ஈயம் போன்ற உலோகங்கள் (அலுமினியம்ää வெள்ளியம் காரியம்ää பித்தளை) அண்டவே விடுவதில்லை.  தங்கத்தோடு அவை பட நேர்ந்தால் நீர்த்தப்பட்ட கந்தக அமிலம் (சல்ப்பூரிக் ஆசிட்) புளிகரைசல் ஆகிய வற்றில் நன்கு கழுவி விடுவது வழக்கம்.

இப்படி ஒதுக்கிவைகப்பட்ட பிற உலோகங்கள் காலமாற்றத்தால் தற்போது தங்க நகைகளை தரம் உயர்த்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா?

இதை அறிந்து கொள்ள தங்க நகைகளை பற்ற வைக்கும் நுட்பம் பற்றி அறிந்து கொள்ள வேண்டும்.

கலப்பு உலோகங்கள் தனித்த உலேகத்தை விட உருகுநிலை குறைவு என்று பள்ளிப்பாடத்தில் படித்திருப்போம். தங்க நகைகள் பற்ற வைக்க தங்கத்தை விட உருகுநிலை குறைந்த கலப்பு உலோகம் தேவை அதற்கு முன்பு பயன்படுத்தப்பட்டது தங்கம் செம்பு வெள்ளி கலவை ஆகும்.  இந்த கலவையில் 20% முதல் 30%வரை செம்பு வெள்ளி சேர்த்தால் தான் உருகி வேலை செய்வதற்கு எளிதாக இருக்கும்.  சமீப காலம் வரை இந்த முறையே பயன்படுத்தப்பட்டது. எனவே இந்த முறையால் செய்த நகைகளை பழசாகின பின் உருக்கும் போது அதில் பற்ற வைக்க பயன்பட்ட கலப்பு உலோகத்தில் உள்ள செம்புää வெள்ளி ஆகியவை சேர்ந்து உருகி அதனுடைய தரத்தில் 1%முதல் 10% வரை குறைவு ஏற்படும்.எனவே தான் பழைய தங்க நகைகள் உருக்கி நகைகள் செய்தால் மச்சம் குறைந்து விடும் என்று சொல்வார்கள்.

நவீன முறையில் பற்ற வைக்க பயன்படுத்தும் கலப்பு உலேகத்தில் செம்பு வெள்ளிக்கு பதிலாக கேடியம்,சிங் போன்ற உலோகங்கள் கலக்கப்படுகின்றது.  இந்த முறையால் தங்கத்தோடு மேற்கண்ட உலோகங்கள் 9மூ முதல் 10மூ வரை மட்டும் சேர்க்கப்படுகின்றன.  அதிலும் கேடியம் பற்ற வைக்கும் நேரத்தியே பாதியளவு ஆவியாகி விடும்.  எனவே இந்த முறையில் செய்யப்படும் நகைகள் உருக்கப்படும் படும் போது தரம் (மச்சம்) குறைவதில்லை 916  hallmark நகைகள் இவ்விதம் செய்யப்படுகின்றன.

இப்படி எது தரத்தை குறைத்துவிடும் என்று ஒதுக்கி வைத்தார்களே அதுவே தரத்தை உயர்த்துவதினாலும் தரத்தை நிர்ணயிப்பதினால் பங்காற்றுகின்றன என்பது முரணான சுவையான நிகழ்வல்லவா?

    

Tuesday, May 28, 2013

டோமியோ


கி.மு. 3,000 டைகிரிஸ் நதி, ‘மெசபட்’ என்று அழைக்கப்படும் அந்த பகுதியை தனது  வளமான வண்டலால் செழிப்பாக்கிக் கொண்டு சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. நாரைகளும், கொக்குகளும் மீன் வேட்டையாடிபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தன.

Saturday, April 13, 2013

சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”

“எல்லாரும் வந்தாச்சா ஆரம்பிக்கலாமா?” கேட்டவாறே கம்பீரமாக அமர்ந்தார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர். 

“ஆமா சார் ஆரம்பிச்சுடலாம்” என்றவாறே மைக்கை சரிசெய்தார் உதவியாளர். 

அது மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள மீட்டிங்ஹால்.
மாவட்டத்திலுள்ள நகைக்கடை செல்போன்கடை அடகுக்கடை நிதிநிறுவனங்கள் ஆகியவற்றை சேர்ந்தவர்கள் அனைவரும் குழுமியிருந்தனர். 

“எல்லோருக்கும் வணக்கம்.  இப்போ எதுக்கு நீங்க எல்லோரும் அழைக்கப்பட்டிருக்கீங்கன்னு உங்களுக்கே தெரியும் ஏற்கனவே உங்க பகுதி லோக்கல் ஸ்டேசன்ல மீட்டிங் வச்சு விளக்கம் சொல்லியிருப்பாங்க மீண்டும் ஏன் இந்த மீட்டிங் அப்படின்னா எல்லாம் உங்க நலனுக்காதத்தான். 

தமிழ்நாடு முழுவதும் நிறய கொள்ளைச் சம்பவங்கள் நடந்திட்டிருக்கு இருக்கிற கொஞ்சம் போலிஸ் போர்ச வச்சு எல்லாருக்கும் பாதுகாப்பு கொடுக்க முடியாது.  அதனால் எல்லா கடையிலேயும் அலாரம் சி.சி.டிவி போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கன்ன்னு வற்புறுத்திட்டு வர்றோம் இன்னும் நெறய பேரு செய்யலன்னு தெரியும் எனவே எல்லாரும் சீக்கிரம் மாட்டுங்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுங்க.

கொஞ்சம் தண்ணீர் அருந்திக் கொண்டார்.

தொடர்ந்தார்.    
“சரி ஒவ்வொருத்தரா எழுந்து என்னன்ன பாதுகாப்பு ஏற்பாடுகள் கெஞ்சிருக்கீங்கன்னு சொல்லுங்க” 

ஒவ்வொருத்தராய் சொல்ல ஆரம்பித்தனர். நகைக்கடைக்காரர் சுந்தரம் எழுந்தார். 

“சார் நம்ம கடை சின்ன கடை மக்கள்கிட்டே பணபுழக்கம் வேற இல்ல.  வியாபாரமே இல்ல இப்ப போயி இதுக்கு செலவு பண்ண கஷ்டமாயிருக்கு சார்”

“சரி உங்க கடையில எங்வளவு சரக்கு இருக்கும்?” 

“அது வந்து” இழுத்தார்

“ஒரு கிலோ தங்கமாவது இருக்கும் இன்னிக்கு என்ன மதிப்பு ஆவுது.  ஒரு இருப்தாயிரம் செலவு பண்ணினா என்ன தப்பு? பிறகு திருட்டு போயிருச்சின்னா வாயில வயித்துல அடிச்சிப்பீங்க. 

வேணும்னா எங்க காவல்துறை செலவுல உங்களுக்கு கேமரா மாட்டித் தர்றோம்.  ஆனா இந்த சிசிடிவியை ஸ்பான்சர் செய்தது மாவட்ட காவல்துறைன்னு போர்டு வச்சுடுவோம்” என்றார்.

அனைவரும் சிரித்தனர்.

சுந்தரம் மூக்கறுபட்ட மனநிலையோடு அமர்ந்தார் இன்னனாருவர் எழுந்தார். 

“சார் ஒரு சந்தோம் கடய உடச்சு திருடவர்றவன் முதல் வேலையா கேமராவ ஆப் பண்ணிடுவான் பிறகு எப்படி கண்டுபிடிப்பீங்க?” 

“ஐயா இதிலதான் நீங்க காவல்துறையோட மூளைய புரிஞ்சுக்கணும்! ஒரு கடையில கொள்ளையடிக்கப் போறவன கண்டிப்பா அந்த கடைக்கு முன்கூட்டியே வந்து பொருள் வாங்குறமாதிரி நோட்டம் பாப்பான்.  ஆதனால பழய வீடியோ பதிவு போட்டு பாத்து கண்டுபிடிச்சிடுவோம். அது மட்டுமல்ல கூட்ட நெரிசல பயன்படுத்தி பகல்லேயே பொருளைத்திடுறவன கண்டுபிடிக்கலாம் உங்க கடை ஊழியர்களை கண்காணிக்கலாம் அதனால சிசிடிவி கண்டிப்பா மாட்டுங்க” 

அனைவரிடமும் கையெழுத்து பெற்றபின் கூட்டம் முடிந்தது. 

அந்த சிறுநகரத்தில் ஒரு சிறிய நகைக் கடையில் அமர்ந்தபடி புலம்பிக் கொண்டிருந்தார் சந்தரம் சமீபத்தில் தான் அவர் மகளுக்கு திருமணம் நடத்தியிருந்தார். அதற்கு வேறு நிறைய செலவு செய்திருந்தார். 

“ஏற்கனவே பெரிய கடைகள் எல்லாம் வந்து சிறுகடைகளுக்கெல்லாம் வியாபாரம் படுத்துடுச்சி இப்ப பாத்து இந்த போலீங்காரங்க வேற இதமாட்டு அத மாட்டுன்னு தொல்லை பண்றாங்க” தனக்குள் புலம்பியபடி இருந்தாலும் புதிதாய் மாட்டியிருந்த சிசிடிவியில் தன்னுடைய உருவத்தை தானே பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்.           
“வீடியோவில் என் தொப்பையே தெரியலியே வயிறு குறைஞ்சிடுச்சா என்ன?” 

கடைப்பையனிடம் வினவினார். 

“ஆங்… கொஞ்சம் பெரிய டி.வியில் பார்த்தா பெரிசாத் தெரியும் இவ்வளவு சின்ன பழய டி.வி. அதுவும் ப்ளாக் அன் நயிட் எங்கேயிருந்து தான் உங்களுக்கு கெடச்சுதோ?”

“டேய் ஒல்ட் இஸ் கோல்டுடா இந்த டிவிய பத்தி ஒனக்கு என்னடா தெரியும் இருபது வருசமா ஒடிகிட்டு இருக்கு இப்ப உள்ள புதுமாடல் ரெண்டு வருசம் கூட தாங்காதேடா? 

“ஆமா இதுக்கு ஒண்ணுட குறச்சல் இல்ல” தனக்குள் முனங்கினான் பையன்.  
முன்தினம்தான் சுந்தரம் தனது கடையில் சிசிடிவி மாட்டியிருந்தார். சிறிது நேரத்தில் ஒரு பெண் கடையில் நுழைந்தார்.  முப்பது வயது இருக்கும் நல்ல உயரம் நல்ல சிகப்பு மஞ்சள் நிற சுடிதார் அணிந்திருந்தாள். 
நல்ல வியாபாரம் நடக்க போகிறது என்று எண்ணி மகிழ்ந்து “வாங்க மேடம் வாங்க உக்காருங்க தம்பி மேடத்துக்கு ஒரு கூல்ட்ரிங்ஸ் வாங்கிட்டு வா” 

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் நான் பொருள் வாங்க வரலே நான் க்யூ ப்ராஞ்ச் சி.ஐ.டி எஸ். ரஞ்சனி!”  

மனதிற்குள் திக்கென்று உணர்ந்தார் என்னரது விசாரணைன்னு புரியலியே  அதற்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. 

வந்தவள் ஒரு பேப்பர் எடுத்தாள்.

நான் எஸ்பி ஆபிஸிலிருந்து வர்றேன் மாவட்டம் முழுவதும் எல்ல கடைகளிலிலேயும் சிசிடிவி மாட்டியிருக்கான்று பாத்து ரிப்போட் குடுக்க சொல்லியிருக்காங்க லோக்கல் இன்ஸ்பெக்டர்கிட்டே உங்க ஊரு லிஸ்ட்டெல்லாம் வாங்கிட்டு வர்றேன் 

“அப்படியா” நிம்மதி அடைந்தார். 

“உங்க கடையில சிசிடிவி மாட்டியிருக்கிங்களா?”     

“ஆமாம் மேடம்

“வேற அலாரம் மாட்டியிருக்கீங்களா?”
“இல்லே மேடம்”  

“சீக்கிரம் மாட்டிடுங்க சரியா” என்றபடி பெயர் முகவரி எல்லா எழுதி கையொப்பம் வாங்கிக் கொண்டாள்.  

சுந்தரமும் பவ்யமாய் போட்டுக் கொடுத்தார். 

“சார் இந்த ஊரில் இன்னும் பத்து கடைகள் போக வேண்டியிருக்கு வெயில் வேற பயங்கரமாயிருக்கு உங்ககிட்ட டூவீலர் ஏதும் இருக்கா?”

“வண்டி…என் பையன் வண்டிதான் எடுத்துட்டு வந்தேன் அது பெரிய பைக் இருநூறு சிசி வண்டி…” 

“நான் எல்லா பைக்கும் ஓட்டுவேன் நான் ட்ரெயினங்குல பைக் சாகசம் எல்லாம் பண்ணியருக்கேன்” 

“ஒஹா” என்றபடி சாவியைக் கொடுத்தார் அவள் பைக்கை ஸ்டார்ட் செய்து கிளம்பிய அழகு நன்றாகத் தான் இருந்தது. அன்று வியாபாரம் நன்றாக இருந்தது.  மதிய உணவுக்கு கிளம்ப மதியம் மூன்று மணி ஆகிவிட்டது. 

அப்போதுதான் கவனித்தார் பைக் வாங்கிச் சென்ற பெண் எஸ்.ஐ. இன்னும் வரவில்லை. 

“பத்து கடையில் ரிப்போர்ட் எழுதிகிட்டு வர இவ்வளவு நேரமா?”

நீரிழிவு என்னும் அரக்கன் வேறு வயிற்றை கிள்ளினனான். 

“ஒருவேளை வேலை முடித்துவிட்டு ஸ்டேசனுக்கு போயிருப்பாங்களோ?” எண்ணியவாறே.

“டேய் தம்பி போலீஸ் ஸ்டேசன் நம்பர் சொல்லு இன்ஸ்பெக்டர் நமக்கு தெரிஞ்சவர்தாமே அவர்கிட்ட அங்கே வந்துருக்காங்களான்று கேப்போம்” என்றார்.     
நம்பர் பார்த்து போன் செய்தார். 

“ஹலோ போலீஸ் ஸ்டேசனா நான் சுந்தரம் நகைக்கடையிலிருந்து பேசறேன் இன்ஸ்பெக்டர் சார் இருக்காகரா? 

“ஆமா”
“கொஞ்சம் பேசணும் குடுங்களேன்!” 

இன்ஸ்பெக்டர் லைனில் வந்தார். 

“சொல்லுங்க அண்ணாச்சி” 

“சார் வணக்கம் க்யூப்ராஞ்ச் எஸ்.ஐ ரஞ்சனி மேடம் அங்க இருக்காங்களா?”

“க்யூ ப்ராஞ்ச் எஸ்.ஐ. ரஞ்சனியா அப்படி யாரும் வரலியே” 

“வரலியா உங்ககிட்டதான் லிஸ்ட் வாங்கிட்டு ரிப்போட் எடுக்க வந்தாங்க சார்”  
“அப்படி நாங்க யாரையும் அனுப்பலியே” 

சுந்தரம் அதிர்ச்சியுடன் கத்தினார் 

“சார் எங்க கடையில ஒரு திருட்டு நடந்திருக்கு” 

“அப்படியா நீங்க சி.சி.டி.வி மாட்டிட்டீங்களா?”
 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.