Friday, September 27, 2013

விண்வெளி விண்வெளி

         
                   கி.பி.2100
அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. அந்த விண்வெளி ஓடத்தை இருவர்  செலுத்திக் கொண்டிருந்தனர்.
           ‘’நண்பா நமது பயணம் எப்போது முடியும்?
            ‘’இன்னும் நான்கு புதிய கிரகங்களில் இறங்கி ஆய்வுசெய்து நமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?’’
             ‘’அப்படியானால் இன்னும் நான்கு மாதங்கள் ஆகிவிடும்’’
              ‘’அதோ ஒரு புதிய கிரகம் தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போம்’’
              விண்வெளி ஓடம் மெதுவாக அந்த புதிய கிரகத்தை நெருங்கியது.பெரும்பகுதி நீரால் சூழப்பட்டிருந்த அந்த கிரகத்தை சுற்றி வந்தது.
           ‘’தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளது. இன்னும் தாழ்வாக பறந்து பார்க்கலாம்’’
          ‘’அதற்கு முன் தற்காப்புகான ஆயுதங்களை அலெர்ட் செய்துகொள்வோம். எப்படிப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியாதல்லவா?’’
‘’சரியாகச் சொன்னாய்’’
     அனைத்தையும் ஆயத்தம் செய்துவிட்டு கிரகத்தின் நிலப்பகுதியில் தாழ்வாகப் பறக்கத் தொடங்கினார்கள்.
     நிலப்பகுதி முழுவதும் மிகப்பெரிய கட்டிடங்கள்,உயர்ந்த கோபுரங்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிதிலமடைந்துபோய் கிடந்தன. உயிரினங்கள் ஒன்றையும் காணோம். ஆச்சிரியப்பட்டுப் போனார்கள்.
           ‘’சமீப காலத்தில்தான் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கின்றன போலும்’’
             ‘’’ஆம் அப்படித்தான் தெரிகிறது. தரையிறங்கி பார்ப்போமா?
             திடீரென்று விண்வெளி ஓடத்தில் அபாய விளக்கு சிகப்பு நிறத்தில் எரிந்தது. அபாய ஒலியும் ஒலித்தது
              கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் ஒலித்தது.
              ‘’கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுகிறேன் நீங்கள் மிகவும் ஆபத்தான கிரகத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். உடனே வெளியெறவும்’’
               .’’ஏன் என்ன விசயம்’’ 
  ‘’’ அதீத விஞ்ஞான வளர்ச்சியால்  சுற்றுச்சூழல் மாசுப்பட்டு அங்கே வாழ்ந்த உயரினங்களெல்லாம் அழிந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான ரசாயன வாயுக்களும்,கதிரியியக்கமும் கிரகம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன.உடனே வெளியேறவும்.’’
               ‘’அப்படியா இந்தக் கிரகத்தின் பெயர் என்ன?’’

                                                ‘’ பூமி.

Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது.
தண்ணீர் இன்று காசு கொட்டும் முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. எங்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
முறையான தரச்சான்று இல்லாமல் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் அதை அரசு அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
ஒழுங்காக முறையாக சுத்திகரிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் உயிரற்ற நீர்தான் என்றும் இயற்கையான தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள் நீக்கப்படுவதாலும்,நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாலும் உடல் ஆரோக்கியத்து கேடு என்றும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
  இந்நிலையில், அம்மா வாட்டர் என்ற பெயரில் அரசு தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அரசின் கடமை என்ன?  நீதி, நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டியது ஒரு அரசின் பொறுப்பு ஆகும். அதை விடுத்து அரசே தண்ணீர் வணிகத்தில் ஈடுபடுவது தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முறையற்ற செயலாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் உயர் அழுத்தத்தில் அரசு வழங்குகிறது. நாம் அந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை.
வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும் நிலையில், புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து, புதிய திட்டங்களை தீட்டி அதில் முதலீடு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அதற்காக பெருமைப்படலாம்.
அதைவிடுத்து நாங்களே குறைந்த விலைக்கு தண்ணீர் தருகிறோம் என்று கூறுவது வெட்கப்படவேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே ஒரு தண்ணீர் விற்பனையில் அரசு அதிகம் சம்பாதித்து வருவதால் இந்த தண்ணீர் விற்பனையிலும் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணமா இல்லை நமது குடிமகன்கள் மதுவில் கலப்பதற்கு அதிக விலை கொடுத்து ‘வாட்டர் பாக்கெட்’ வாங்கி கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் மலிவு விலையில் தண்ணீர் கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணமா தெரியவில்லை.
அரசு மது பார்களில் அம்மா வாட்டர் விற்கப்படுகிறதா அங்கு என்னவிலை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுவார்களாக!

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.