Sunday, April 9, 2017

குறுங்கவிதைகள் பகுதி 3

உன் பணம் எனக்கு வேண்டாமென
ரோசத்தோடு துப்புகிறது
ஏடிஎம்!

தனக்கு ஒரு விலைவந்ததும்
தண்ணீர்க்குடங்குளும்
தலைகீழாய்த்தான் நிற்கின்றன!

எங்கள்சாலையோர மரங்கள்
வேர்களில் விளைவிக்கின்றன
காலி மதுப்புட்டிகளை!

கிரீஸ் தடவப்பட்டன
சாலைகளில்
சிறுமழைக்குப்பின்!

கசங்கிய மலர்ப்பாதை
நிறைவடைந்தது
மயானம்!

ஒரு வாடகைத்தாய்
பயணம் செய்கிறாள்.
அந்த ஆட்டோவின் பின்னே
எழுதப்பட்டிருந்தது
பிரசவத்திற்கு இலவசம்!

கருவில் இருக்கும் குழந்தை
ஆணா பெண்ணா என்றறிவது
சட்டப்படி குற்றம்
பின்குறிப்பு:
அழிப்பது குற்றமல்ல!

மூத்திரசந்துகள்
அனுமதி
ஆண்களுக்கு மட்டும்!

பக்தர்களை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
கைவிடப்பட்ட மைல்கல்!

மீன் சுவையில்
யாருக்கும் தெரியவில்லை
மீனவன் இரத்தவாடை!

பொருட்பெண்டிர்

சாய்ந்திருந்தால் அல்ல
எழுந்திருந்தால்தான்
எனக்கு ஓய்வு.

அவனுக்கு கவிதை
எனக்கு அமிலம்.

தினம்தினம்
தீக்குளித்தும்
கிட்டவில்லை
பத்தினிப்பட்டம்.

நான்குசுவர் நடுவே
விளைகின்றன
எனக்கான நெல்மணிகள்

எவனோ அருந்துகிறான்
என் குழந்தையின் 
உணவை!

Sunday, June 26, 2016

“கிழக்கு வெளுத்தது”

           
            எழுதியவர் தா. ராசாமணி
மல்லிகா சுட…சுட இருந்த பால் பாத்திரத்தை ஹால் தரை மீது வைத்தாள்.
கூந்தலில் சூடியிருந்த மல்லிகைசரம்அந்த அறையில் காதல் போதை மணத்தை தாராளமாக பரப்பிக் கொண்டிருந்தது.
கோபால் அவளைப் பார்த்தான்…!  பார்வையில் ஒரு வித மயக்கம்.  அவளை அப்படியே அள்ளி அணைக்க தூண்டியது  அவனது வாலிப வயது…!
“மல்லிகா…இன்று வழக்கத்திற்கு மாறாக அதிக அழகாக இருக்கிறாய்….ஐந்து வருடத்திற்கு முன் நம்முடைய முதலிரவில் இப்படிதான் நீ என்னருகில் வந்தாய்….”அவன் புன்னகையோடு சொன்னான். ஆனால் அதில் சோகம்;.பளிச்சிட்டது…..”
“உங்க மனம் ஏன் இப்படி இன்று தடுமாறுகிறது..?  எனக்கு புரியவில்லை.  நம்முடைய இறுதி தீர்மானத்தின்படி நடப்பதுதான் வாழ்வின் கடைசி மணித்துளிகளிலிருக்கும் நமக்கு நல்லது சரி….சரி….இந்த பாட்டிலின் மூடியைத் திறக்க முடியவில்லை திறந்து தாருங்கள்…”
மல்லிகா அந்த சிறு பாட்டிலை கோபாலிடம் கொடுத்தாள்.
“விஷம்..” என்ற எழுத்துக்கள் அந்தபாட்டியிலிருந்து குழல் விளக்கு ஒளியில் நன்கு பளிச்சிட்டது.
கோபால் அந்த கடுமையான விஷம் நிறைந்த பாட்டிலின் மூடியை திறந்து மல்லிகாவிடம் கொடுத்தான்.
மல்லிகா விஷத்தை பாலில் ஊற்றினாள்.
“நம்முடைய முதலிரவில் சுவையான பால் நிறைந்த டம்பளரை என்னிடம் கொடுத்தாய்…ஆனால் இன்று…விஷம் கலந்த பாலை எனக்கு தர போகிறாய்…”
இதுவரை அடக்கி வைத்திருந்த சோகம் பீறிட்டு அவளை அழ வைத்தது.
அழகிய கண்களிடமிருந்து கண்ணீர் கொட்ட ஆரம்பித்தது.
சோகத்தின் உச்சக்கட்டம்….!
வேதனையின் இறுதிக்கட்டம்….!
“அழாதே மல்லிகா….”என்ற கோபால் அவளை அணைத்துக் கொண்டான்…
“இன்று நமது வாழ்வின் இறுதிநாள்…. நமது குடும்ப வாழக்கைக்கு சமாதி கட்டும் கடைசிநாள்….!
கோபால் மெதுவாக அவள் காதருகில் மென்மையாக சொன்னான்.
 அவர்களது பேச்சையோ….செயலையோ கண்டுக் கொள்ளாமல் அவர்களது மூத்த மகன் நான்கு வயது நிறம்பிய பாலகன் கணேசும்….மூன்று வயது நிரம்பிய இரண்டாவது வாரிசான
கிருத்திகாவும் அமைதியாக தூங்கிக் கொண்டிருந்தனர்.
இளம் குருத்துக்கள்….தாய் தந்தையின் மன இறுக்கத்தை புரிந்துக் கொள்ள முடியாத சிசுகள்….!
கோபால் குழந்தைகளைப் பார்த்தான்…“இந்த இளம் குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்…. அவர்களும் நம்மோடு இறக்க வேண்டி இருக்கே…!  ஆண்டவா….! இது உனக்கே அடுக்குமா…?
மல்லிகா மன இறுக்கத்தில் கோபாலை இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டாள்.
அவளது அழகிய விரல்கள் அவனது தோளை கிழித்தன…!
அந்த வலியை அவன் உணர முடியாத நிலையில் இருந்தான்.
“ஆண்டவா…! நாங்க என்ன தவறுச் செய்தோம்….ஏன் எங்களுக்கு இந்த சோதனை…” மல்லிகா கதற ஆரம்பித்தாள்.
“என் பெற்றோர் கூலிவேலைச் செய்பவர்கள்.  எவ்வளவோ துன்பத்தின் மத்தியில் நான் எம்.ஏ ஆங்கிலம் படித்தேன்.  கல்லூரி பேராசிரியராக பணியாற்ற வேண்டும் என்று எம்.பில் முடித்தேன்.  தேசீய அளவிலான தகுதித்தேர்விலும் தேர்ச்சிப்பெற்றேன்.  ஆனால் வேலை கிடைக்க வில்லை.  சுயநிதிகல்லூரியில் ஆங்கில பேராசிரியர் பணி கிடைத்தது.  மாத சம்பளம் ரூபாய் ஐயாயிரம்.  அந்த வேலையை மனப்பூர்வமாக செய்தேன்.  இப்பொழுது அந்த வேலையும் பறிப்போய் விட்டது….”
மல்லிகா தன் முகத்தை தூக்கி அவனைப் பார்த்தாள்.
“இன்று காலை வழக்கப்படி நான் பணிக்கு சென்றேன்.  கல்லூரி தாளாளர் என்னை அழைத்தார்.  நான் அவரை சந்தித்தேன்.  அவர் சொன்னார்…” கோபால் நீங்க பார்க்கிற ஆங்கில பேராசிரியர் பணி அரசு உதவிப் பெறும் பணியாக”  மாறிவிட்டது.  என்றார்.  நான் மகிழ்ச்சியோடு அவரை பார்த்துக் கொண்டிருந்தேன். அவர் தன் முகத்தை இரும்பு போல் கடினமாக வைத்துக்கொண்டு சொன்னார்.
“கோபால் நமது நிர்வாகத்துக்கு ரூபாய் இருபத்தைந்து லட்சம் நீங்க கொடுத்தால் இந்த அரசு உதவிப்பெறும் ஆங்கில பேராசிரியர் பணியை நீங்கள் தொடர்ந்து பார்க்கலாம்.  அரசு ஊதியமும் உங்களுக்கு கிடைக்கும் என்றார்.  நான் என் ஏழ்மை நிலைமையை எடுத்துரைத்தேன்.” மல்லிகா தன் கண்களை அகலமாக்கி தன் கணவர் கோபாலை கவலையோடு பார்த்தாள்.
“இன்னும் கேளு….மல்லிகா….என் பேச்சுக்கு அவர் இடம் கொடுக்க வில்லை. சாரி…மிஸ்டர் கோபால்….ரூபாய் இருப்பதைந்து லட்சம் கொடுத்தால்ää  இந்த பணியைத் தொடரலாம் இல்லை என்றால் வேலையை விட்டு போகலாம்…என்று கடினமாக உறுதியாக சொல்லிவிட்டார்.
“நீங்க வேறு ஏதாவது வேலையை கேட்க வில்லையா…? மல்லிகா கேட்டாள்…அவளது கண்கள் அவனது முகத்தையே வட்டமிட்டன.
“கேட்டேன்….மல்லிகா….இதுவரை ஆங்கில பேராசிரியராக பணிபரிந்த நீங்கள்…இனி எந்த வேலையைச் செய்தாலும் அதில் முழு ஈடுபாடு இருக்காது. எனவே நாங்கள் உங்களை டிஸ்மிஸ் செய்கிறோம்…. “குட்பை…” என்றவர் அந்த இடத்தை விட்டு நகர்ந்து விட்டார். எனக்கு அவமானமும்; ஏமாற்றமும் ஏற்பட்டது. உடனே வீட்டுக்கு வந்து விட்டேன் மல்லிகா…"
“நான் எவ்வளவு ஏமாற்றத்தை சந்தித்து இருக்கிறேன்…தெரியுமா…உங்களுக்கு?”  மல்லிகா வெறித்த பார்வையோடு தன் கருவறையில் பிறந்த இளம் வாரிசுகளை பார்த்தவாறு கூறினாள்.
“என்னுடைய சிறுவயதில் என் அன்னையை இழந்தேன் என் அப்பா இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்;.அவர் சாதி வெறிப்பிடித்த ஒரு அரசியல் கட்சியின் உபதலைவர்.  என்னை ஒரு ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்தார். சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் என்னை வந்து பார்ப்பார்.  செலவுக்கு அதிகமாக பணம் கொடுப்பார்.  அன்றைய காலகட்டத்தில் தமிழகமே தமிழுக்கு போராடிக் கொண்டிருந்ததால் நான் எம்ஏ தமிழ் முடித்தேன்.  எம்பில் முடித்தேன். அப்பொழுதுதான் நீங்கள் என்னை காதலித்தீர்கள்….”
“ஏன் நீ என்னை காதலிக்க வில்லையா….?  கோபால் அந்த சோகமான சூழ்நிலையிலும் கொஞ்சம் கோபமாக கேட்டான்…
“பெட்ரோலையும் நெருப்பையும் அருகில் வைத்தால் இரண்டுமே சேர்ந்து தீயை வளர்க்க தானே செய்யும். நானும் காதல் வயப்பட்டேன்.  நம் இருவருமே வௌ;வேறு ஜாதிகளை சார்ந்தவர்கள்.  உங்க பெற்றோரும் என் தந்தையும் நம் திருமணத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் நாம் நமது சொந்த கிராமத்தை விட்டு சென்னைக்கு வந்து சட்டபடி திருமணம் செய்து கொண்டோம்.
கோபால் தொடர்ந்தான்….
நான் சுயநிதி கல்லூரியில் பேராசிரியராக செர்ந்தேன்.  உனக்கு தமிழ் போராசிரியை பணி கிடைக்காததால் ஒரு மெட்ரிக் பள்ளியில் முவாயிரம் ரூபாய்க்கு தமிழாசிரியை பணியில் சேர்ந்தாய்…வீட்டு வாடகை நான்காயிரம் போக….மீதி பணத்தை வைத்து குடும்பம் நடத்தினோம் காலத்தின் பரிசாக மகன் கணேசும்….மகள் திருத்திகாவம் கிடைத்தாள்.
மல்லிகா மகன் கணேஷ் அருகில் அமர்ந்து “அந்த விஷம் கலந்த பாலை” ஆற்றிய வாறு….தலையை கவிழ்ந்தவாறு தொடர்ந்தாள்.
“இப்பொழுது வேலை உங்களுக்கு போய்விட்;;டது.  இனி உங்களுக்கோ எனக்கோ அரசு மானியம் வாங்கும் கல்லூரிகளில் பேராசிரியர் பணி கிடைக்காது.  ஏனெனில் நம்மால் இருபது லட்சம் நாற்பது லட்சம் கொடுத்து வேலை வாங்க  முடியாது.நம்மிடம் எந்த சேமிப்பும் இல்லை. நம் பெற்றோர் நம் உறவை துண்டித்து விட்டார்கள்…”
மல்லிகாவின் பிடியிலிருந்து விலகிய கோபால் ஜன்னல் வழியே வெளியே பார்த்தான்.
இருளின் நிழலிலே உலகம்…..!
இருண்டிருந்த உலகைப்பார்த்து கண் சிமிட்டி மௌன புன்னகையை வெளியிட்டுக் கொண்டிருந்த விண்மீன்கள்....!
தூரத்தில் எங்கோ ஊழையிட்டுக் கொண்டிருந்த தெருநாய்கள்….!
கோபால் மெல்ல தன் மனைவியைப் பார்த்து திரும்பினான்.
“நீயோ…நானோ இனி கல்லூரிகளில் பேராசிரியர் வேலை பார்க்க முடியாது.  ஏனெனில்  நகரத்தில் அதிகபட்சம் நான்கு அல்லது ஐந்து கல்லூரிகள்தான் இருக்கும்.  ஒரு சப்ஜெட்க்கு ஐந்து அல்லது 8 பேர் வேலைப்பார்ப்பார்கள்.  ஆனால் அந்த ஒரு சப்ஜெட்க்கு -- பாடபிரிவுக்கு குறைந்தது ஐநூறு பேராவது விண்ணப்பம் பண்ணுவார்கள்.  படித்த அனைவருக்கும் வேலைக்கு வாய்ப்பில்லை…இனி நாம் எந்த பயிற்சியும் படித்து மேல்நிலைப்பள்ளிக்கோää அல்லது தொடக்கப்பள்ளிக்கோ ஆசிரியராக பணிபுரிய முடியாது.  எனவே தான் நாம் அனைவரும் தற்கொலை செய்துக் கொள்ள போகிறோம்….வாழமுடியாதவர்கள் வாழ தகுதியில்லாதவர்களுக்கு தற்கொலைதான் சரியான முடிவு….கோபால் பிரமை பிடித்தவன் போல் நின்றுக் கொண்டிருந்தான்….
“நாம் தற்கொலைச் செய்துக் கொண்டால் இந்த பிஞ்சு குழந்தைகள் நம் அன்பின் பரிசான இந்த குழந்தைகள்….இந்த பாழும் சமுதாயத்தில் அனாதைகளாய்….வயிற்று பசியில் பிச்சைக்காரர்களாய் வாழ்வது….என்னால்…அந்த காட்சியை கற்பனை பண்ணிக்கூட பார்க்க முடியவில்லை”
“மல்லிகா “அந்த பாலை டம்பளரில் ஊற்றிக் கொடு….நான் என்….அன்பு மகனுக்கு கொடுக்கிறேன்.  அதன்பின் மகள் கிருத்திகாவுக்கு கொடுக்க…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் கண்ணீர் மளுக நின்றான்.
மல்லிகா ஒரு டம்பளரில் அந்த பாலை ஊற்றிக் கொடுத்தாள்.
அதை வாங்கிய கோபால் தன் மகனை பார்த்த வண்ணம் அவனை நோக்கி நடந்தான்.
மகன்கணேசன் ஏதோ கனவு கண்டு மெல்ல புன்னகை செய்துக்கொண்டிருந்தான்.
“கணேசன்…..கணேசன்….”-கோபால் தன் மகனை தட்டி எழுப்பினான்.
கோபால் தன் மகனை தூக்கி தன்மடியில் வைத்து பால் டம்பளரை அவன் வாயில் திணித்….
டக் டக்..என்று கதவை தட்டும் சத்தம் கேட்டது…
“மிஸ்டர் கோபால்……மிஸ்டர் கோபால் பழக்கப்பட்டகுரல்…
“மல்லிகா….பால் நன்றாக ஆரட்டும்….நான் யார் கதவை தட்டுகிறார்கள்…. நான் பார்த்திட்டு வருகிறேன்…..”
கோபால் விஷபால் டம்பளரை தரையில் வைத்து விட்டு முன் கதவை திறந்தான்.
“கோபால்….சாரி…இந்த இரவு நேரத்தில் உங்களுக்கு தொந்தரவுக்கு கொடுக்கிறேன்”.
“என்ன விஷயம் ஆனந்த்….?”
“ஒரு முக்கியமான விஷயம்… நாளை காலை பத்து மணிக்கு நம்ம மாவட்ட கலெட்டர் நம்ம கல்லூரிக்கு வருகிறார்…அவரை வரவேற்க நம்ம என்.சி.சி. அதான் தேசிய மாணவ படைக்கான யூனிபார்மை எடுக்க இன்று மாலை பிரோவை திறந்தேன்ஆனால்;….”
என்ன ஆனந்த்…என்ன அச்சு….”
“அவ்வளவு யூனிபாமும் கீழே விழுந்து விட்டன.  மேலும் அவையாவும் இஸ்திரிப் போடாமல் இருந்தன.  ஆந்த யூனிபார்ம்களை மாணவர்களுக்கு கொடுக்;க முடியாது. அப்படி கொடுத்தால் பிரின்ஸ்பால் மற்றும் என்.சி.சி அலுவலர்களும் என் மீது புகார் பண்ணுவார்கள்…
“நான் அந்த யூனிபார்மை மூட்டையாக கட்டி வழக்கமா நமக்கு இஸ்த்ரிப் போடுகிற தொழிலாளியை பார்க்க ஓடினேன்….ஆனால் ஏதோ கல்யாணத்திற்காக வெளியூர்க்கு போய் விட்டான்….நான் திகைச்சிட்டேன்….ரொம்ப கவலைப் பட்டேன்…..
ஆனந்த் கல்லூரியில் விளையாட்டுத்துறை பேராசிரியர்….கோபாலிடம் அதிக மதிப்பு வைத்திருப்பவர்….
“நான் எல்லா இடத்திலும் அலைந்து அயர்ன் பண்ணும் கடைகளைத் தேடினேன்.  ஒரு கடையும் இல்லை….அப்பொழுதுதான் உங்க நினைவு வந்தது.  ஒருமுறை நீங்கள் கால்பந்தாட்ட வீரர்களுக்கானய10னிபார்ம் எல்லாம் அயர்ன் பண்ணி கொடுத்தீர்கள்….”
“மேலே செல்லுங்க ஆனந்த்”
தயவு செய்து இந்த நாற்பது ஜதை ய10னிப்பாம் ஆடைகளை அயர்ன் பண்ணித்தாருங்கள்.  பிளிஸ்….நான் உங்களை கெஞ்சிக் கேட்கிறேன்.  நான் நம்ம விளையாட்டு மைதானத்தை சுத்தப்படுத்தவும் அலங்காரம் சீட் அரேச்மெண்ட எல்லாம் இருக்குது மிஸ்டர் கோபால் தயவுசெய்து இந்த உதவியை செய்யுங்கள்”
ஆனந்த் தன்பையிலிருந்து இரண்டு ஐநுறு ரூபாய் நோட்டுகளை நீட்டீயவாறு கேட்டான்.
“என்னங்க உங்க பையன் “அந்தபாலை” எல்லாம் காலால் உதைத்து கொட்டி விட்டான்….”
“மல்லிகா….கீழே சிந்திய பாலை துணிவைத்து துடைத்து எடுத்து விடு…. நீயும் குழந்தையோடு படுத்து தூங்கு…”
.”ஆனந்த் காலையில் வந்து ய10னிபார்ம் எல்லாம் எடுத்துகுங்க….”
கோபாலின் அந்த பணத்தைப் பெற்றுக் கொண்டே கூறினான்.
அடுத்த நாள் காலை ஐந்து மணி….
யூனிபார்ம் எல்லாம் அயர்ன் பண்ணின கோபால் அவற்றை அழகாக பார்சலாக கட்டி வைத்தான்.
வீட்டிலிருந்து சிவப்பு நிற சாக்பீஸை எடுத்து வந்த கோபால் வீட்டு சுவற்றில்….மிக தெளிவா…“இங்கு துணிகள் “அயர்ன்” பண்ணித்;தரப்படும்….” என எழுதினான்.
ஒரு சட்டைக்கு ரூபாய் ஐந்து என அயர்னுக்கு வாங்கலாம்.  ஓரு நாளைக்கு ஐம்பது சட்டைகள் அயர்ன் பண்ணினால் ரூபாய் இரநூற்றி அம்பது கிடைக்கும் ஒரு பட்டுபுடவையை போன்ற துணிக்கு ரூபாய் இருபது வாங்கலாம். யாருக்கும் அடிமையாக வேலைச் செய்யாமல்; சொந்த உழைப்பில் மாதம் ரூபாய் எட்டாயிரம் வரை சம்பாதிக்கலாம்….
முதன் முதலாக அவன் புன்னகைத்தான்…. அதே நேரத்தில் கிழக்கு வெளுத்தது….!ஒரு புதிய வாழ்வு அவனிடம் உதித்தது.


Monday, July 28, 2014

குறுங்கவிதைகள் பகுதி 2

விரைந்து செல்லும் காரை
துரத்திப்பிடிக்க முயன்று
தோற்கும் சருகுகள்!

எத்தனை வர்ணனைகள்
எத்தனை கவிதைகள்
கொடுத்து வைத்த நிலா!

உனக்கும் எனக்கும் 
சற்றிடைவெளி வேண்டும் என்கிறாய்!
எனக்கோ உன் சிற்றிடைவெளி
எப்போதும் வேண்டும் என்கிறேன்!

புதுக்கதை எழுத
தனியாய்ப்போன இடத்தில் 
கிடைத்த புதுக்கவிதை நீ!

ஒற்றைநாள் வாழ்க்கை
கொண்டாடி மகிழும் 
ஈசல்கள்!

சில நேரம் நான் எழுதுவது
எனக்காக அல்ல!
பேனாவின் முத்தத்திற்காக
ஏங்கிக்கிடக்கும்
காகிதங்களுக்காக!

வயல்களின் தாலிகள்
அறுக்கப்படுகின்றன
புது மனைகளுக்காக!

மனிதர்களின் விருப்பத்திற்காகவே
பழங்களில் பாதியை
விட்டுவைக்கின்றன
அணில்கள்!

சொற்குற்றங்களும்
பொருட்குற்றங்களுமே
ரசிக்கப்படுகின்றன
மழலைகள் உலகில்!

கூட்டத்தோடு குடிக்கும்
நண்பர்கூட்டம்
குடித்து குடித்து
குடல் வெந்து
இறந்த நண்பனின்
அடக்கத்திற்கு பின்!

ஏக்கத்தோடு பார்க்கிறான் சிறுவன் போண்டாவை!
சிகரெட் வாங்க தந்தை தந்த சில்லறையோடு!

கையொடிந்தும் விரிசல் விழுந்தும்
நாறகாலிகள் நான்கு! 
இரு செங்கற்களை காலுக்கு 
முட்டுக்கொடுத்த பெஞ்சு ஒன்று!
நைந்த சேலையை வியர்வை 
நனைக்க அவிக்கும் பெண்! 
பரிமாறும் கணவன்! 
சாக்கடை கொசுக்கள் கடிக்க 
வாகனப்புகை சுவாசித்து 
சிறுதுண்டில் உறங்கும் குழந்தை! 
உள்ளே இறங்கவில்லை இட்லி!

டிஷ் ஆண்டனாக்கள்!

மழையே போ எனகின்றன
வீடுதோறும் மொட்டைமாடியில்
திருப்பி வைக்கப்பட்ட குடைகள்!

தான் எதையும் வறுக்காமல்
தானே வெயிலில் வறுபடும்
வாணலிகள்!

புதியபுதிய சேனல்களுக்காக
வானத்தைக் கையேந்தும்
திருவோடுகள்! 


Friday, June 6, 2014

நீரில்லாத மேகம்

                                                       எழுதியவர் தா. ராசாமணி
வாழ்க்கை முட்டாளால் சொல்லப்பட்ட ஒருகதைசேக்ஸ்பியர்.
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே உள்ளது அந்தச் சிறிய இரயில் நிலையம்.
இரயில்வே நிலையத்தின் வெளியே அழகியத் தோட்டம். எப்பொழுதும் நிழல் கொடுக்கும் உயர்ந்த மரங்கள்.. அந்த மரங்களை ஒட்டி சில சிமெண்ட் பெஞ்சுகள்!
மாலை நேரத்தில பதவியிலிருந்து ஒய்வுப்பெற்ற வயோதிக நண்பர்களுக்கு அந்த சிமெண்ட பெஞ்சுதான் சிம்மாசனங்கள். தினசரி மாலை ஐந்து மணிக்கு அவர்கள் வந்துவிட்டால் அந்த இடம் கலகலத்துப் போய்விடும். அரட்டைகள்! மலரும் நினைவுகள்! விவாதங்கள்! இலக்கியம்! அரசியல்! அங்கு அலசப்படும். வயோதிகத்தை கவலைகளை மறந்து அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பயணிகளும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் ரசிப்பார்கள்.
பேராசிரியர் காசிராசன் தனது கர்ச்சிப்பால் சிமெண்ட் பலகையை துடைத்துவிட்டு அமர்ந்தார். அவர் அருகில் ஜெ.கே.ஆர். (தங்களுடைய நீண்ட பெயர்களை சுருக்கி தங்கள் பெயர்களை அவர்களே ஞானஸ்நானம் செய்து கொள்வார்கள்) ஒவ்வொரு நண்பர்களும் அவர்களோடு வந்து இணைந்துக் கொண்டனர்.
பம்பாயில் பயங்கர மத கலவரமாம் பலர் கொல்லப்பட்டனர். என டிவியில் செய்தி ஒளிபரப்பப்பட்டதுபேராசிரியர் மெதுவாக விவாதத்தை ஆரம்பித்தார்.
அட அட…” விஜயராஜி சார் வருத்தம் தெரிவித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.
எனக்கு என்னத் தோணுதுனா அந்த எல்லா மத கடவுள்களும் நேரடியாக ஒருவருக்கொருவர் சன்டைப்போட்டுக் கொள்ளலாம்! கொஞசம் கற்பனை செய்து பாருங்கள் ஒரு கடவுள் வேல் கொண்டு வருவார் இன்னொரு கடவுள் கடாயுதம் கொண்டு வருவார் எதிர் அணியில் இன்னொரு மத கடவுள் நீண்ட வாள் கொண்டு வருவார் இப்படி கடவுள்கள் சண்டைப் போடடுக் கொண்டால் பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் அப்பாவி பக்தர்களை ஏவிவிட்டு சண்டை போடவிட்டு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெய்வங்கள்.!  தமிழாசிரியர் மெல்ல தனது நாhத்திக கொள்கையை பரப்ப ஆரம்பித்தார்.
கடவுள் யாரையும் சண்டைப் போட சொல்லவில்லை. பக்தர்கள்தான் தங்கள் சொந்த இலாபத்திற்காக தேவையில்லாமல் சண்டை போடடுக் கொண்டால் கடவுள் என்ன செய்வார்? தபால் நிலைய அதிகாரியாக இருந்த சுவர்ணமானிக்கம் சார் சொன்னார்.
இப்படி மதச் சண்டைப் போடுபவர்களுக்கு உண்மையிலே தங்கள் மதக் கொள்கைகளோ. தத்துவங்களோ தெரியாது. இப்படி மதச்சண்டைப் போட்டால் தங்கள் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பார் என்ற தவறான எண்ணம் கொண்டு இருக்கிறார்கள்…” ஒய்வு பெற்ற மின்துறை அதிகாரி ஸ்டிபன் சார் சொன்னார்.
கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அருமையாக சொல்லியிருக்கிறார். நம்ம நாட்டுக்கு மத நம்பிக்கை அவசியமில்லை மனித அன்புதான் தேவை. அது தான் மனித சமுதாயத்தை முன்னேறச் செய்யும்…” சமர்தர்மக் கொள்கை அடிப்படையில் கூறினார் எழுத்தாளர் பெருமாள் இவர் இரண்டு கதை தொகுப்பினை வெளியிட்டவர். அன்பானவர் அனைவரையும் குறிப்பாக அந்த முதியவர் கூட்டத்தை தன் எழுத்து வல்லமையினால் கட்டிப் போட்டவர்.
இதுவரை அமைதியாக இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு புதியவர்.“நான் கூட சார் சொன்னதை ஆதரிக்கிறேன் இன்று மனிதநேயம் தான் அவசியம். மதங்கள் மீது கொண்ட வெறியல்ல…”
அனைவரும் அந்த புதியவரை பார்த்தனர் ஐயம் சாரி என்னுடைய பெயர் மாசில்லாமணி மனதத்துவ பேராசிரியர் திருச்சியில் மனநல மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த ஊரில் திருமதி. ஞானம் கோவில்பிள்ளை என்பவர் என் சொந்த சகோதரி.
அவங்க மகளுக்கு நாளைக்கு கல்யாணம் அதுக்hக வந்திருக்கிறேன்..டாக்டர் மாசில்லாமணி தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பேசிக் கொண்டிருந்தவர்களை இடித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண். அவளுடைய இடுப்பில் தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் குடம் யாரிடமும் எதுவும் பேசாமல் குடத்திலிருந்த தண்ணீரை அங்கிருந்த செடிகளுக்கு ஊற்றினாள்.
பார்க்க முப்பது வயதிருக்கும் சற்று கருத்தமேனி கடமையை செய்யும் வெறிஎன்ன கமலா செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வந்தாயா?” பேராசிரியர் காசிராசன் கேட்டார்.
ஆமாம் என்பது போல் தலையசைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றாள்.
யார் இந்த பெண்? இப்படி இன்டிசன்டாக நடந்து கொள்கிறாள்?” டாக்டர் மாசில்லாமணி கேட்டார்.
இந்த பெண். கொஞ்சம் பைத்தியம் என்னுடைய பழைய மாணவி. கமலா. அது ஒரு கதை டாக்டர். பேராசிரியர் கவலையோடு அணைவரையும் பார்த்துவிட்டுக் தொடர்ந்தார்.
நான் பணியாற்றிய கல்லூரியில் கமலா பைனல் இயர் படித்துக் கொண்டிருந்தாள். ஒழுக்கமான பெண் அவளை ஒரு தலையாக ரவி என்ற மாணவன் காதலித்திருக்கிறான். ஒரு நாள் வரம்புமீறி அவளிடம் ஏதோ சேட்டை செய்திருக்கிறான். அவள் அவனுடைய கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டுஇனி என்னிடம் தவறாக நடந்தால் நடப்பது வேறு…” என எச்சரித்திருக்கிறாள்…”
அடடா ஒரு நாவல் படிப்பதுபோல் இருக்கிறது சார். மேலே சொல்லுங்கள் என ஊக்கப்படுத்தினார் டாக்டர்.
சேக்ஸ்பியர் சொன்துபோல் வாழ்க்கையே ஒரு முட்டாளால் சொல்லப்பட்ட கதை தானே! டாக்டர்! கமலா மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதியதும் அவளுடைய விதவை தாய் அவளுக்கு திருமணம் பண்ணி வைத்தாள். மணமகன் மாணிக்கம் திருநெல்வேலியில் ஒரு கம்பெனியில் அக்கௌன்டராக வேலைப் பார்த்துக் பொண்டிருந்தான். தினமும் இங்கிருந்து இரயிலில் தான் வேலைக்குச் சென்று வருவான். மணவாழ்வு மிக இனிமையாக போய்க் கொண்டிருந்தது ஆனால் ஒருநாள்…”
ஒருநாள் பிளிஸ் தொடர்ந்து கதையைச் சொல்லுங்க தலைமை ஆசிரியர் விஜயராஜ் சொன்னார்.
கமலாவின் கணவர் ஒருநாள் காலைப் பணிக்காக இரயிலில் பயணிக்கும்பொழுது அடுத்த ஸ்டேசனில் இரயில் நின்றது. ஒரு வாலிபன் பெட்டி படுக்கையோடு ஏறி மாணிக்கம் அருகில் அமர்ந்தான்.
சார் திருநெல்வேலியில் இறங்கி உடனே அடுத்த இரயில் பிடித்து பம்பாய் போகணும். சார் நான் என்னுடைய மடிக்கணினியைப் பார்த்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்காதே? எனச் சொன்னவன். தன் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்தான். மாணிக்கத்தின் பார்வை அந்த மடிக்கணினி மீது பாய்ந்தது.
அதில் நிச்சயமாக அவளோடு படித்த ரவிதானே! சரியா?” எழுத்தாளர் பெருமாள் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கரெட். அது ரவிதான் ஊரைவிட்டு போகிறவன் மாணிக்கத்தைப் பார்த்ததும் அந்தப் பெட்டியில் ஏறி கமலாவை பழிக்கு பழிவாங்க ஏற்கனவே செயற்கையாக கிராபிக்ஸ் உதவியுடன் ரவியும் கமலாவும் காதல் திருவிளையாடல் செய்வதுப்போல் மடிக்கணினியில் பதிய வைத்திருந்தான்.
அவமானம் அவனை வாட்டியது. வேதனை அவனை விரட்டியது: அவனால் பேச முடியவில்லை. சிந்தனை அவமான சிறையில் சிறைபிடிக்கப்பட்டது. அந்த மடிக்கணினியை பார்த்ததிலிருந்து சிலையாக நின்றான். கமலா ஏற்கெனவே கற்பிழந்தவளா?
அன்றிலிருந்து மாணிக்கம் கமலாவிடம் பேசுவதில்லை.. காரணம் கேட்டு எத்தனையோ முறை கண்ணீர் விட்டிருக்கிறாள் பதிலில்லை!
மகளின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பிளவு கமலாவின் தாயார் இதயத்தை தாக்கியது. அந்த கைம்பெண் எந்த விடையும் தெரியாமல் மாரடைப்பில் இறந்தாள்.
இப்பொழுது கமலா தனிமரம்!
மாணிக்கம் எதையும் சீர்தூக்கி பார்க்க தெரியாதவன். உள்ளத்தில் வரட்டு கௌரவமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உடையவன்.
கமலாமீது கொண்ட வெறுப்பு அவனை இன்னொரு பெண்ணை மனைவி ஸ்தானத்தில் கொண்டு வரச் செய்தது.
அதைக் கண்ட கமலாவின் மனம் பேதலிக்க ஆரம்பித்தது. வறுமைää ஆதரவு இன்மை செய்யாத குற்றத்திற்கு தண்டனை அவளை பைத்தியமாக்கியது.
ஆமாம் ஏன் இவள் செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள்? டாக்டர் வினவினார்.
அதற்கு நான் தான் காரணம்.. நான் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சமூக சேவைக்காக மாணவிகளை அழைத்துச் சென்று மரக்கன்றுகளை நடச்செய்து தண்ணீர் ஊற்றச் செய்வேன் கமலா என் மாணவியாக இருந்ததால் இப்பொழுதும் மனநோய் பிடித்திருந்தாலும் அதே சமூகப்பணியை செய்கிறாள்…” என்றார் தமிழாசிரியர் ராசன்.
சரி இப்போது இந்த பெண்ணுக்கு சாப்பாடு தங்குமிடம் யார் கவணிக்கிறார்கள்…” டாக்டர் வினவினார்.
நாங்கள் தான் பரிதாபப்பட்டு அதோ அந்த சர்ச் கன்னியாஸ்திரிகளிடம் இவளுடைய சோக கதையைச் சொல்லி இவளுக்கு புகலிடம் ஏற்படுத்தினோம்…” என ஸ்டிபன் சார் பதிலளித்தார்.
அதுவரை அமைதி காத்த ஜெ.கே.ஆர் டாக்டரைப் பார்த்து டாக்டர் ஒரு உதவி இந்த பெண்ணை உங்கள் மருத்துமனையில் சேர்த்து குனமாக்க முடியுமா..? நாங்கள் சிகிச்சைக்கான பணத்தை தந்து விடுகிறோம்.” என்றார்.
தூரத்தில் இரயில் வரும் சத்தம் கேட்டது அதுவரை சோகமாக இருந்த கமலாவின் முகம் மலர்ந்தது. தன் கூந்தலையும் உடையையும் சரி செய்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்த தூனுக்கு பின் ஒளிந்துக் கொண்டு இரயில் வண்டியிலிருந்து வெளியே வருபவர்களை கவனிக்க தயாரானாள்.
பேராசிரியர் சார் இதுக்கு என்ன அர்த்தம்?” – டாக்டர் கேட்டார்.
இவளுடைய கணவன் திருநெல்வேலியில் வேலைப் பார்க்கிறான். தினசரி இந்த இரயில் தான் வருவான் அவனைப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு…”
இரயில் ஸ்டேசனை வந்தடைந்தது. பயனிகள் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.
கமலாவின் கண்கள் அவளுடைய கணவன் மாணிக்கத்தை தேடின. அவனைக் கண்டதும் அவள் முகத்தில் புன்னகை! முகம் பிரகாசமடைந்தது.
டாக்டர் மாசில்லாமணி ஜெ.கே.ஆரை பார்த்தார்.
இவளுக்கு என்னால் சிகிச்சை கொடுக்க முடியாது.
ஏன் டாக்டர்…” அங்கிருந்த வயோதிக வாலிபர்கள் கேட்டார்கள்.
டாக்டர் மிக தீர்க்கமாக கூறினார்.
இவளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கினால் இவளுக்கு இன்னும் அதிக சிக்கல்கள் உண்டாகும். முதலாவது இவளுடைய கணவன் இவளை ஏற்றுக் கொள்ளமாட்டான். இப்பொழுது பாதுகாப்பாக தங்க இடமும் உணவும் கிடைக்கின்றன. அவளுக்கு ஆதரவாக கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள். தினசரி தன் கணவனைப் பார்த்து அவள் மனம் பரவசமாகிறது. உங்களுடைய அன்பான கவனமும் போய்விடும். எனவே இவள் இப்படி மனநோயோடு இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்றார் மனநலமருத்துவர்.
சிந்தித்துப் பார்க்கும்போது மற்றவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.
டாக்டரின் வார்த்தையை ஆமோதித்த அனைவரது பார்வைகளும் அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பியது.
அவள் மறுபடியும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்திருந்தாள்.

தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருப்பாள்.
            ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.