Monday, March 11, 2013

பகுத்தறிவு சிறுகதை

சூடு பறந்து கொண்டிருந்தது அடுப்படியில் இல்லை. நிலா தொலைக்காட்சி நடத்தும் உனதா எனதா நிகழ்ச்சி ஒளிப்பதிவின் போது.

ஆவிகள் உண்டு என்று ஒரு அணியும், ஆவிகள் இல்லை என்று அணியும்

அவரவர் கருத்துக்களை அள்ளி வீசிக் கொண்டிருந்தனர்.

ஆவிகள் உண்டு என்ற தலைப்பில் பேசிய ஆவி மீடியம் சுந்தர்ராமன் ஆவிகள் உலகத்தை பற்றியும் ஆவிகள் செயல்படும் விதத்தை பற்றியும் விளக்கி கொண்டிருந்தனர். அவர் மூலம் தங்களது இறந்து போன முன்னோர்களின் ஆவிகளிடம் பேசி குடும்ப பிரச்சனைகளை தீர்த்துக் கொண்டவர்கள் தங்களது அனுபவங்களை கூறி ஆவிகள் உண்டு என்ற அணிக்கு வலு சேர்த்துக் கொண்டிருந்தனர்.

இவை அனைத்தையும் தனது வாதத்திறமையால் மறுத்துக் கொண்டிருந்தார் பகுத்தறிவு பகலவன் செந்தமிழ் செம்மல் என்று பல பட்டங்களை பெற்ற இளவேந்தன். தனது ஆணித்தரமான கருத்துக்களால் ஆவிகள் உண்டு என்ற அணியினரின் மூக்கை அறுத்துக் கொண்டிருந்தார். அவர் பேசும் ஒவ்வொரு தடவையும் பார்வையாளர் பகுதியில் இருந்து கைதட்டலும் கரவொலியும் எழுந்தன.

நிகழ்ச்சியின் இறுதிபகுதியில் இளவேந்தன் ‘என்னைப் பொறுத்தவரை ஆவி என்றால் உலகத்தில் ஒன்றே ஒன்றுதான் உண்டு. அது நீராவி மட்டும்தான். பேய் என்றால் ஒன்றே ஒன்றுதான் அது ஒவ்வொரு ஆண்களுக்கும் திருமணத்திற்குப் பின் வாழ்க்கையில் காண்பது மட்டும்.’ என்று கூறி அரங்கத்தை சிரிப்பலையில் அதிர வைத்தார்.

ஒளிப்பதிவு முடிந்தது. அனைவரும் விடைபெற்றுக்கொண்டிருந்தனர். ‘பகுத்தறிவு பகலவன்’ இளவேந்தன் ஆவி மீடியம் சுந்தர்ராமனை தனியே அழைத்தார்.

தனியறையில் ‘சுந்தர்ராமன் சார். எனக்கு உங்க அப்பாயிண்ட்மெண்ட் வேணும் எப்ப கிடைக்கும்’.

‘என் அப்பாயிண்மெண்டா எதுக்கு?’ ‘இல்ல இறந்து போன எங்கப்பா ஆவியோட சொத்து விசயமா கொஞ்சம் பேசணும்.’



 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.