Monday, July 28, 2014

குறுங்கவிதைகள் பகுதி 2

விரைந்து செல்லும் காரை
துரத்திப்பிடிக்க முயன்று
தோற்கும் சருகுகள்!

எத்தனை வர்ணனைகள்
எத்தனை கவிதைகள்
கொடுத்து வைத்த நிலா!

உனக்கும் எனக்கும் 
சற்றிடைவெளி வேண்டும் என்கிறாய்!
எனக்கோ உன் சிற்றிடைவெளி
எப்போதும் வேண்டும் என்கிறேன்!

புதுக்கதை எழுத
தனியாய்ப்போன இடத்தில் 
கிடைத்த புதுக்கவிதை நீ!

ஒற்றைநாள் வாழ்க்கை
கொண்டாடி மகிழும் 
ஈசல்கள்!

சில நேரம் நான் எழுதுவது
எனக்காக அல்ல!
பேனாவின் முத்தத்திற்காக
ஏங்கிக்கிடக்கும்
காகிதங்களுக்காக!

வயல்களின் தாலிகள்
அறுக்கப்படுகின்றன
புது மனைகளுக்காக!

மனிதர்களின் விருப்பத்திற்காகவே
பழங்களில் பாதியை
விட்டுவைக்கின்றன
அணில்கள்!

சொற்குற்றங்களும்
பொருட்குற்றங்களுமே
ரசிக்கப்படுகின்றன
மழலைகள் உலகில்!

கூட்டத்தோடு குடிக்கும்
நண்பர்கூட்டம்
குடித்து குடித்து
குடல் வெந்து
இறந்த நண்பனின்
அடக்கத்திற்கு பின்!

ஏக்கத்தோடு பார்க்கிறான் சிறுவன் போண்டாவை!
சிகரெட் வாங்க தந்தை தந்த சில்லறையோடு!

கையொடிந்தும் விரிசல் விழுந்தும்
நாறகாலிகள் நான்கு! 
இரு செங்கற்களை காலுக்கு 
முட்டுக்கொடுத்த பெஞ்சு ஒன்று!
நைந்த சேலையை வியர்வை 
நனைக்க அவிக்கும் பெண்! 
பரிமாறும் கணவன்! 
சாக்கடை கொசுக்கள் கடிக்க 
வாகனப்புகை சுவாசித்து 
சிறுதுண்டில் உறங்கும் குழந்தை! 
உள்ளே இறங்கவில்லை இட்லி!

டிஷ் ஆண்டனாக்கள்!

மழையே போ எனகின்றன
வீடுதோறும் மொட்டைமாடியில்
திருப்பி வைக்கப்பட்ட குடைகள்!

தான் எதையும் வறுக்காமல்
தானே வெயிலில் வறுபடும்
வாணலிகள்!

புதியபுதிய சேனல்களுக்காக
வானத்தைக் கையேந்தும்
திருவோடுகள்! 


 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.