கி.மு. 3,000 டைகிரிஸ் நதி, ‘மெசபட்’ என்று அழைக்கப்படும் அந்த பகுதியை தனது வளமான வண்டலால் செழிப்பாக்கிக் கொண்டு சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. நாரைகளும், கொக்குகளும் மீன் வேட்டையாடிபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தன.
வேலையில் மும்முரமாய் இருந்தாலும் அவனுடைய கண்ணும் கருத்தும் பண்ணைக்கு வெளியே பாதையையே நோக்கிக் கொண்டிருந்தன. எதையோ எதிர்பார்த்தபடி அவரது விழிகள் துடித்துக் கொண்டிருந்தன. அந்தி மயங்கும் வேளை! தூரத்தில் புழுதிப்படலம் தெரிந்தது. புழுதிப்படலம் நெருங்க, நெருங்க ஒரு வெண்ணிற புரவி தெரிந்தது. அதனை செலுத்தியபடி ஒரு அழகிய இளைஞன் பாய்ந்து வந்து கொண்டிருந்தான். அந்தக் காட்சியை கண்டதும் ஜூப்ரானின் முகம் சூரியனைப் போல் பிரகாசமடைந்தது. குதிரையில் இருந்து குதித்தவனை நோக்கி ஓடினார். அவனும் தந்தையே என்றபடி ஓடிவந்தான். இருவரும் கட்டித்தழுவி முத்தமழை பொழிந்து கொண்டனர். அவன் பெயர் டோமியோ. ஜூப்ரானின் மகன் ஜூப்ரானை நகல் எடுத்தது போன்ற தோற்றத்தில் இருந்தான். ‘மகனே டோமியோ, உன்னைப் பார்த்து எவ்வளவு நாட்களாயிற்று, எப்படி இருக்கிறாய்?’ பாசத்துடன் கேட்டார்.‘நன்றாக இருக்கிறேன் தந்தையே!’ ‘போர்ப்பயிற்சிகள் அனைத்தையும் முடித்து விட்டாயா மகனே?’ ‘ஆம் தந்தையே வெற்றிகரமாக முடித்துவிட்டேன். அதோடு இன்னொரு மகிழ்ச்சியான செய்தி’என்ன அது? ‘முதலில் இந்த பேரீச்சை பழங்களை உண்ணுங்கள்’ ஓலையால் செய்யப்பட்ட அந்த கூடையை எடுத்துக் கொடுத்தான். ‘இதை உண்டுவிட்டு எனக்கு உணவு தயாரியுங்கள்! அதற்குள் நான் குளித்துவிட்டு வருகிறேன். அப்பொழுது அந்த செய்தியை கூறுகிறேன்’. கூறிவிட்டு மின்னலென ஆற்றை நோக்கி ஓடினான். டைகிரிஸ் நதி சூரியனின் கதிர்களில் குளித்து தங்கப்பாளம் உருகி ஓடுவதைப் போல ஓடிக் கொண்டிருந்தது. அதில் நீந்தியபடி ஆசை தீரக்குளித்தான் டோமியோ. ஜூப்ரான் சுமேரியப்படையில் சிறந்த வீரராகத் திகழ்ந்தவர். அக்காடியருடன் சுமேரியருக்கு ஏற்பட்ட பல போர்களில் பங்கேற்றவர். டோமியோவுக்கு ஐந்து வயதானபோது அவனது தாய் நோய்வாய்ப்பட்டு இறக்கவே படையிலிருந்து விலகி இந்த பண்ணையை கவனித்தபடி மகனை வளர்த்து வந்தார். டோமியோ குளித்து முடித்து வந்தான். உணவு தயாராயிருந்தது. இருவரும் உண்டு மகிழ்ந்தனர். ‘இப்பொழுது சொல் என்ன மகிழ்ச்சியான செய்தி?’ என்று ஜூப்ரான் வினவினார். ‘தந்தையே எனது திறமையை பரிசோதித்து என்னை அரசரின் மெய்க்காப்பாளர்களில் ஒருவராக நியமித்திருக்கிறார்கள். அதைக் கேட்டதும் ஜூப்ரான் துணுக்குள்ளார். அவர் முகம் வாடியது. ‘என்ன தந்தையே இந்தச் செய்தியை கேட்டதும் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் உங்கள் முகம் வாடுகிறதே ஏன்? ‘அதெல்லாம் ஒன்றுமில்லை அரண்மனைப்பணி என்றால் உன்னை அடிக்கடி காணமுடியாதே! அதனால் தான்! ‘இதற்காகவா வருத்தப்படுகிறீர்கள் மூன்று மாதத்திற்கு ஒருமுறை விடுமுறையில் உங்களைக் காண ஓடிவந்துவிட போகிறேன்’ சிரித்தான். டோமியோ சிரித்து சமாதானப்படுத்தினாலும் ஜூப்ரான் சோகத்துடனேயே காணப்பட்டார். இரவு சரியாகத் தூங்கவில்லை. பத்து நாட்களுக்கு பின் நிப்பூர் நகரத்துக்கு கிளபினார்கள். ஒரு ஓட்டகத்தையும், ஒரு காளைக்கன்றையும் கொண்டு சென்றார்கள். சுமேரியர்களின் தலைநகரமான நிப்பூர் ஜனக்கூட்டத்தால் நிரம்பியிருந்தது. ஆனாலும் அனைவரும் ஒரு ஒழுங்கை கடைபிடித்தனர். ஜூப்ரானும் டோமியோவும் வரிசெலுத்துமிடத்திற்கு சென்று தங்கள் வரியாக ஓட்டகத்தை செலுத்தினார்கள் கணக்கு அதிகாரி ஜூப்ரானின் வம்சத்தையும் பெயரையும் கேட்டறிந்து ஓட்டகத்தை வரவு வைத்துக் கொண்டார். கடை வீதிக்குச் சென்று தங்களிடமிருந்து வெண்ணெயைக் கொடுத்து எண்ணெய் முதலிய பூஜைப் பொருட்களை வாங்கிக் கொண்டனர். ‘அடுத்து நாம் எங்கு செல்லவேண்டும் தந்தையே’? டோமியோ கேட்டான். ‘கோவிலுக்குச் சென்று இந்த காளைக்கன்றை பலியிட வேண்டும்’ கூறியபடி வேகமாக நடந்தார் ஜூப்ரான். பிரம்மாண்டமாக எழுந்து நின்றது ‘என்லில்’ கடவுளின் கோயில் கோபுரம் பயபக்தியோடு உள்ளே நுழைந்தனர். பூஜை பொருட்களை புரோகிதர்களிடம் ஒப்படைத்தனர். இறக்கைகள் உடைய இரண்டு காவல் தெய்வங்கள் இருபக்கமும் வணங்கியபடி இருக்க நடுவில் ‘என்லில்’ தெய்வத்தின் சிலை தெரிந்தது. ஜூப்ரான் கண்களை மூடியபடி வேண்டினார் ‘பூமியையும் வானத்தையும் சொர்க்கத்தையும் ஆட்சி செய்யும் மேன்மையுள்ள என்லிலே! எங்கள் கடவுளே! உன்னை வணங்குகிறேன். என் மகனை நீண்ட ஆயுளோடும் பெரும்புகழோடும் வாழவைப்பாயாக! விழுந்து வணங்கினார்கள். காளைக்கன்று பலி கொடுக்கப்பட்டது. பின்னர் அரண்மனைக்குச் சென்று டோமியோவை பணிக்கு அனுப்பிவிட்டு கண்ணீருடன் விடை பெற்றார் ஜூப்ரான். மூன்று மாதங்கள் சென்றது. டோமியோ திரும்பி வந்தான். ‘இந்தமுறை என்னுடன் எத்தனை நாள் இருப்பாய் மகனே?’ ‘பிறை தெரிந்த நான்காம் நாள் பணிக்கு திரும்பும் படி எனக்கு உத்தரவு தந்தையே!’ ஜூப்ரான் கணக்கிட்டார். இன்னும் ஏழு நாட்கள் உள்ளது. அதுவரை மகன் தன்னுடன் இருப்பான் என்று அகமகிழ்ந்தார். மறுநாள் ஒரு துக்கச்செய்தி வந்தது. மன்னர் இறந்து விட்டார் என்று! ஜூப்ரான் கலங்கியபடி அமர்ந்துவிட்டார். ‘தந்தையே நான் உடனே அரண்மனைக்கு கிளம்புகிறேன். விடைகொடுங்கள்’ கேட்டான் டோமியோ. ‘வேண்டாம்! வேண்டாம்! உனக்கு உத்தரவிட்டபடி நாளுக்கு முன்னதாக செல்லக்கூடாது’! பதறியபடி மகனை தடுத்தார். ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்கப்படுவதாகவும், அதன்பின்பு மன்னர் அடக்கம் செய்யப்படுவதாகவும், அதற்காக ஆடம்பரமான கல்லறை தயாராவதாகவும் ஜூப்ரானுக்கு தகவல் கிடைத்தது. பிறை தெரிந்த மூன்றாம் நாள். மறுநாள் பணிக்கு செல்ல வேண்டியிருப்பதால் அதற்கான ஆயத்தங்களில் ஈடுபட்டிருந்தான் டோமியோ. இரவு உணவு முடித்துவிட்டு வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தனர். டோமியோ தனக்கு தூக்கம் வருகிறது என்று கூறினாலும் அவனை தூங்கவிடாமல் பழங்கதைகளை பேசியபடியே இருந்தார் ஜூப்ரான். மறுநாள் டோமியோ கண் விழித்தபோது சூரியன் உச்சியை நெருங்கிக் கொண்டிருந்தது. பதறியபடி எழுந்தான். அரண்மனைக்குச் செல்ல வேண்டிய நேரம் கடந்துவிட்டதே என்று பதட்டமடைந்தான். தந்தையை அழைத்தான். அவரைக் காணவில்லை பண்ணை முழுவதும் தேடிப்பார்த்தான் எங்கே போய் விட்டார். குழம்பியபடி வேகமாக புறப்பட்டான். தனது உடை முதலிய உடமைகளை வைத்திருந்த மூட்டையை எடுக்க போனான். அதையும் காணவில்லை. என்னவென்று புரியவில்லை. தந்தையையும் காணவில்லை. தனது உடமைகளையும் காணவில்லை. சற்று நேரம் செய்வறியாது நின்றான். உத்தரவிடப்பட்ட நாளில் பணிக்கு திரும்பாத குற்றத்துக்கு ஆளாக நேரிடுமே என்று உணர்ந்து நகரத்துக்கு வேகமாக சென்றான். நிப்பூர் அரண்மனை. கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அன்று தான் இறந்து போன மன்னரின் நல்லடக்கம். அரண்மனையின் ஒரு பகுதியில் அழகிய வேலைப்பாடுடன் சிறிய மாளிகை போன்ற கல்லறை தயார் செய்யப்பட்டிருந்தது. மன்னரின் உடல் நடுநாயகமாக அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் புரோகிதர்கள் நின்றுகொண்டு சடங்குகளை செய்து கொண்டிருந்தனர். டோமியோ கூட்டத்தில் முண்யடித்து கல்லறையின் அருகே சென்று விட்டான். நடப்பது அனைத்தையும் கவனித்து கொண்டிருந்தான். தலைமைப் புரோகிதர் கையை உயர்த்தி ஏதோ கூறினார். உடனே கூட்டத்தை பிளந்து கொண்டு வீரர்கள் வந்தனர். அவர்களின் பாதுகாப்போடு அலங்கரிக்கப்பட்ட ஏராளமான உடல்கள் வரிசையாக எடுத்துவரப்பட்டன. அவற்றை மன்னரின் உடலைச் சுற்றிலும் அடுக்கிக் கொண்டிருந்தனர். என்ன இது என்று குழம்பியபடி டோமியோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் உடல்கள் வந்து கொண்டே இருந்தன. அதில் ஒரு உடலை பார்த்து திடுக்கிட்டான். அவனது மெய்க்காப்பாளர் உடையை அணிந்தபடி அந்த உடல். முழங்கையில் நீண்ட தழும்பு! அது தனது தந்தையல்லவா! ஆம் அது ஜூப்ரானின் உடல்தான்! துடிதுடித்து போய்விட்டான். ‘தந்தையே தந்தையே’ கதறியபடி அருகில் ஓடினான். உடலைத் தொட்டு கதறினான். வீரர்கள் அவனை பிடித்து தள்ளினர் ‘அது எனது தந்தை’ ‘அது எனது தந்தை’ அழுது புரண்ட படி கத்தினான். ‘அதனால் என்ன? வீரர்கள் கோபத்துடன் கேட்டனர். ‘அவருக்கு என்ன ஆயிற்று? ‘மூடனே! சுமேரிய மன்னர்கள் இறந்த பின்னரும் வாழ்பவர்கள்! நமது மன்னர்கள் வாழப்போகும் நிழல் வாழ்க்கைக்காக மன்னருடைய சேவகர்கள், பணியாட்கள் மெய்க்காப்பாளர்கள் அனைவரையும் கொன்று மன்னருடனேயே அடக்கம் செய்வது வழக்கம். அது உனக்கு தெரியாதா?’ அதிர்ந்தான் வெகுநேரம் கதறிக்கொண்டே இருந்தான் டோமியோ.
Tweet | |||||
டோமியோ - அருமை... தங்களின் என் தளத்தில் இட்ட கருத்துரை மூலம் உங்கள் தளம் அறிந்தேன்... Followers ஆகி விட்டேன்... தொடர்கிறேன்...
ReplyDeleteஉங்கள் தள வடிவமைப்பு மிகவும் அருமை... பாராட்டுக்கள்...
தமிழின் முதன்மை பதிவர் அவர்களின் வருகைக்கும் கருத்துரைகளுக்கும் நன்றி. தளவடிவமைப்பு பற்றிய பாராட்டுரைகள் தங்கம்பழனி என்ற சிங்கத்துக்கே சொந்தம்.
ReplyDelete