Sunday, April 9, 2017

குறுங்கவிதைகள் பகுதி 3

உன் பணம் எனக்கு வேண்டாமென
ரோசத்தோடு துப்புகிறது
ஏடிஎம்!

தனக்கு ஒரு விலைவந்ததும்
தண்ணீர்க்குடங்குளும்
தலைகீழாய்த்தான் நிற்கின்றன!

எங்கள்சாலையோர மரங்கள்
வேர்களில் விளைவிக்கின்றன
காலி மதுப்புட்டிகளை!

கிரீஸ் தடவப்பட்டன
சாலைகளில்
சிறுமழைக்குப்பின்!

கசங்கிய மலர்ப்பாதை
நிறைவடைந்தது
மயானம்!

ஒரு வாடகைத்தாய்
பயணம் செய்கிறாள்.
அந்த ஆட்டோவின் பின்னே
எழுதப்பட்டிருந்தது
பிரசவத்திற்கு இலவசம்!

கருவில் இருக்கும் குழந்தை
ஆணா பெண்ணா என்றறிவது
சட்டப்படி குற்றம்
பின்குறிப்பு:
அழிப்பது குற்றமல்ல!

மூத்திரசந்துகள்
அனுமதி
ஆண்களுக்கு மட்டும்!

பக்தர்களை எதிர்ப்பார்த்து
காத்திருக்கிறது
கைவிடப்பட்ட மைல்கல்!

மீன் சுவையில்
யாருக்கும் தெரியவில்லை
மீனவன் இரத்தவாடை!

பொருட்பெண்டிர்

சாய்ந்திருந்தால் அல்ல
எழுந்திருந்தால்தான்
எனக்கு ஓய்வு.

அவனுக்கு கவிதை
எனக்கு அமிலம்.

தினம்தினம்
தீக்குளித்தும்
கிட்டவில்லை
பத்தினிப்பட்டம்.

நான்குசுவர் நடுவே
விளைகின்றன
எனக்கான நெல்மணிகள்

எவனோ அருந்துகிறான்
என் குழந்தையின் 
உணவை!

Sunday, June 30, 2013

குறுங்கவிதைகள்

*புற்றுநோய்க்கு பயந்து
 புகையை கைவிட்டது
 மின்சார ரயில்!
*துருப்பிடித்து தவமிருக்கிறது
 செல்போன் அழியட்டும் என்று
 தபால்பெட்டி!
*எப்படியும் தேடி வருவார்கள் என்று
 நம்பிக்கையோடு மூலையில்
 முடங்கிக்கிறது குடை!
*அருவி கருமையாக கொட்டுமோ
 உன் கூந்தல்?
*இலக்கியம் பேசுகின்றன உன் விழிகள்!
  இலக்கணம் மீறத்துடிக்கிறது என் மனம்!
*கடற்கரையில் காதல்
 ஒரு சுண்டல் பொட்டலம் தின்று முடிக்கும் நேரத்தில்
 கசக்கி எறியப்படுகிறது அந்த காகிதத்தைப்போல இன்று!
 ஒரு அலை வந்து திரும்பிச்செல்லும் நேரத்தில் மறைந்துவிடும் நாளை!
*பனிமூடிக்கிடக்கிறாயே என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்துவிட்டோம்
 உள்ளே உன் தேகம் கொதிப்பேறிக் கிடக்கிறது என்பதை அறியாமல்!
*காதோரம் வெண்மை!
 குன்றாத கற்பனை! குறையாத எழுத்துக்கள்!
 உருமாறும் பாத்திரங்கள் சமையலறையில்!
*அழகிய கணணியால் பத்து விரலும் பேனாவாய் மாறினாலும்
 ஒழுகிய பேனாவால் பத்துவிரலும் மைபூசியது மறக்குமோ?
*மிதித்தாலும் சுமக்கின்றது
  சைககிள்!
*நதியை பெண்ணென்று வைத்தது
 அதன் துகில் உரித்திடத்தானோ
 மணல்கொள்ளையர்களே?
*அன்பே நம் காதலில் எதிரிகள் யாருமில்லை
 என்றிருந்தேன் நீயே எதிரியாவாய் என்றறியாமல்!
*வெள்ளை எறும்புகள்
 ஒன்றன் பின் ஒன்றாக
 சாலையின் நடுவே கோடுகள்!
*கண்ணீரை சிந்தியபடி செல்கின்றன
 தாயை பிரிந்த சோகத்தில்
 ஆற்றின் குழந்தைகள் மணல் லாரிகளில்!

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.