Tuesday, May 28, 2013

டோமியோ


கி.மு. 3,000 டைகிரிஸ் நதி, ‘மெசபட்’ என்று அழைக்கப்படும் அந்த பகுதியை தனது  வளமான வண்டலால் செழிப்பாக்கிக் கொண்டு சலசலத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. நாரைகளும், கொக்குகளும் மீன் வேட்டையாடிபடி பொழுது போக்கிக் கொண்டிருந்தன.

Thursday, March 21, 2013

தேரிக்காட்டில் ஒரு எழுத்துக்காடு

அது சுற்றிலும் தொழிலாளர் மிகுந்த பகுதி. அங்கு அதில் பனை ஓலையால் வேயப்பட்ட சிறு கோழி இறைச்சிக்கடை. அதன் பின்னால் சிறு விறகு கடை.காலை நேரம் அந்தக் கைகள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. கோழிகளை துண்டு துண்டுகளாக்குகிறது.  மின் நிறுவையில் போடுகிறது.  பணத்தை பெற்று கல்லாவில் போடுகிறது. அந்த கைகள் உழைத்து உழைத்து இறுகிப்போனதாய் தெரிகிறது.  அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் ஆறுமுகப்பெருமாள். வாடிக்கையாளர்களிடம் இன்முகமாய் பேசுகிறார்.  நாட்டு நடப்புகளை அலசுகிறார்.

முற்பகல் வியாபாரம் முடிகிறது.  இரத்தம் தோய்ந்த கைகள்  அலசப்படுகின்றன.

பிற்பகல் அதே கைகளில் இப்பொழுது பேப்பரும் பேனாவும் சிந்தனைகள் எழுத்துக்களாய் மாறி சிறுகதைகளாய் பிறக்கின்றன.  மாலை நேரம் அவரைத்தேடி இலக்கிய விரும்பிகள் வருகிறார்கள். இப்பொழுது அந்தக் கைகளுக்கு சொந்தக்காரர் கண்ணகுமார விஸ்வரூபன். தமிழ் சிறுகதை எழுத்தாளர்.

இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ள இவர் படித்திருப்பதோ எட்டாம் வகுப்பு வரை மட்டுமே.  தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் என்னும் ஊர் ஆட்கொண்டு விட்ட மணிநகர் என்ற பகுதியைச் சார்ந்தவர். அந்தப் பகுதி செம்மண் போர்த்தப்பட்ட பனைமரங்கள் உயர்ந்து நிற்கும் தேரிக்காடு 1952ல் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த ஆறுமுகப்பெருமாள் அவர்களால் குடும்பநிலை காரணத்தால் தொடர்ந்து படிக்க முடியவில்லை. ஆனால் சிறுவயதில் அதிகநேரம் வாசமிருந்தது நூலகத்தில்தான். பல்வேறு தொழில்களை செய்த கடும் உழைப்பாளியான இவர் முதல் சிறுகதை 1982ம் ஆண்டு வாரமலரில் நாலணாச்சுமை என்ற பெயரில் வெளிவந்தது. அதன்பின் குமுதம் ஆனந்த விகடன் போன்ற முண்னணி இதழ்களில் தொடர்ந்து எழுதியுள்ளார்.

இவரது கதைகள் தென் தமிழக பகுதில் சாதாரண மக்களின் வட்டார மொழி வாசனையோடு சமுதாய் பிரச்சினைகளை அலசுகின்றன. வீண் வர்ணனையும் வார்த்தை ஜாலங்களும் இன்றி எளிய நடையிலேயே உள்ளன சமுதாய அவலங்களின் மீதான கேலியும் கோபமும் ஆற்றாமையும் வெள்ளமென வெளிப்படுத்துகின்றன. இதுவரை வெளிவந்த தொகுப்புகள் மூன்று. மணிமேகலை வெளியிட்டது இரண்டு. 'பாதை மாறாத பாதங்கள்' 'ஓடும் ரயிலின் ஓர் உத்தம தாய்' ஆகியன. பாவை பதிப்பகம்  வெளியிட்டது
 "சாலையோர ஆலமரம்" என்னும் தொகுப்பு . விரைவில் மற்றொன்று வெளிவர இருக்கின்றது..  சமீபத்தில் தினமலர் வாரமலர் நடத்திய டி.வி.ஆர் நினைவு சிறுகதை போட்டியில் இவரது வெளிச்சத்துக்கு வராதவள் என்ற சிறுகதை இரண்டாம் பரிசை வென்றது.

சிறுகதை என்பது என்வென்பதை அவரது வார்த்தையிலேயே கேட்போம்.

“காணுகின்ற கேள்விப்படுகின்ற ஒரு சம்பவம் ஏற்படுத்தக் கூடிய உணர்ச்சி வசப்படுதலின் கலையம்ச வெளிப்பாடே சிறுகதை ஆகும்.

          பிடித்த எழுத்தாளர்களாக அகிலன்ää இராஜநாராயணன் ஆகியோரைக் கூறும் இவரை மிகவும் பாதித்த நாவலாக மேற்கு வங்க எழுத்தாளர் விபூதிபூசன் பானர்ஜி எழுதிய ஆரண்யக் (தமிழில் வனவாசி) என்னும் நாவலைக்கூறுகிறார்.  தமிழ் நாவல்களில் பிடித்த நாவல்களாக  சமுதாயத்தில் நிகழ்கின்ற அவலங்களை முகத்தில் அறைந்தாற்போல் கூறும் நெஞ்சில் ஒரு அலைகள் எங்கே போகிறோம் ஆகியவற்றை கூறுகிறார்.

           இவரது எழுத்துக்கள் செம்மணல் வெளியான தேரிக்காட்டை சூழ்ந்துள்ள கிராமங்களில் வாழ்கின்ற ஏழை மக்களின் வாழ்நிலைகளை பெரும்பாலும் படம்பிடிப்பதால் இவருக்கு "தேரி இலக்கியவாதி" என்று சமீபத்தில் ஆர் நல்லக்கண்ணு அவர்களால் பட்டம் சூட்டப்பட்டதை பெருமையாகக் கொள்கிறார்.  தற்சமயம் 1970களுக்கு முன்பு தேரியில் விறகு சுமந்து வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ஒரு நாவல் எழுதி வரகிறார்.  அது வெளிவர காத்திருப்போம்.    

எழுதுவது என்பதே அரிதான விஷயம். அதிலும் சாதாரண நிலையில் இருந்துகொண்டு தொடர்ந்து எழுதி வரும்  கண்ணகுமார விஸ்வரூபன் அவர்களை பாராட்டுவோம் .

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.