Friday, June 6, 2014

நீரில்லாத மேகம்

                                                       எழுதியவர் தா. ராசாமணி
வாழ்க்கை முட்டாளால் சொல்லப்பட்ட ஒருகதைசேக்ஸ்பியர்.
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே உள்ளது அந்தச் சிறிய இரயில் நிலையம்.
இரயில்வே நிலையத்தின் வெளியே அழகியத் தோட்டம். எப்பொழுதும் நிழல் கொடுக்கும் உயர்ந்த மரங்கள்.. அந்த மரங்களை ஒட்டி சில சிமெண்ட் பெஞ்சுகள்!
மாலை நேரத்தில பதவியிலிருந்து ஒய்வுப்பெற்ற வயோதிக நண்பர்களுக்கு அந்த சிமெண்ட பெஞ்சுதான் சிம்மாசனங்கள். தினசரி மாலை ஐந்து மணிக்கு அவர்கள் வந்துவிட்டால் அந்த இடம் கலகலத்துப் போய்விடும். அரட்டைகள்! மலரும் நினைவுகள்! விவாதங்கள்! இலக்கியம்! அரசியல்! அங்கு அலசப்படும். வயோதிகத்தை கவலைகளை மறந்து அவர்கள் பேசிக்கொண்டு இருப்பதை பயணிகளும் அவர்களை வழியனுப்ப வந்தவர்களும் ரசிப்பார்கள்.
பேராசிரியர் காசிராசன் தனது கர்ச்சிப்பால் சிமெண்ட் பலகையை துடைத்துவிட்டு அமர்ந்தார். அவர் அருகில் ஜெ.கே.ஆர். (தங்களுடைய நீண்ட பெயர்களை சுருக்கி தங்கள் பெயர்களை அவர்களே ஞானஸ்நானம் செய்து கொள்வார்கள்) ஒவ்வொரு நண்பர்களும் அவர்களோடு வந்து இணைந்துக் கொண்டனர்.
பம்பாயில் பயங்கர மத கலவரமாம் பலர் கொல்லப்பட்டனர். என டிவியில் செய்தி ஒளிபரப்பப்பட்டதுபேராசிரியர் மெதுவாக விவாதத்தை ஆரம்பித்தார்.
அட அட…” விஜயராஜி சார் வருத்தம் தெரிவித்தார். அவர் ஒரு கிறிஸ்தவ பள்ளியில் தலைமை ஆசிரியராய் இருந்தவர்.
எனக்கு என்னத் தோணுதுனா அந்த எல்லா மத கடவுள்களும் நேரடியாக ஒருவருக்கொருவர் சன்டைப்போட்டுக் கொள்ளலாம்! கொஞசம் கற்பனை செய்து பாருங்கள் ஒரு கடவுள் வேல் கொண்டு வருவார் இன்னொரு கடவுள் கடாயுதம் கொண்டு வருவார் எதிர் அணியில் இன்னொரு மத கடவுள் நீண்ட வாள் கொண்டு வருவார் இப்படி கடவுள்கள் சண்டைப் போடடுக் கொண்டால் பார்க்க பரவசமாக இருக்கும். ஆனால் அப்பாவி பக்தர்களை ஏவிவிட்டு சண்டை போடவிட்டு அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் தெய்வங்கள்.!  தமிழாசிரியர் மெல்ல தனது நாhத்திக கொள்கையை பரப்ப ஆரம்பித்தார்.
கடவுள் யாரையும் சண்டைப் போட சொல்லவில்லை. பக்தர்கள்தான் தங்கள் சொந்த இலாபத்திற்காக தேவையில்லாமல் சண்டை போடடுக் கொண்டால் கடவுள் என்ன செய்வார்? தபால் நிலைய அதிகாரியாக இருந்த சுவர்ணமானிக்கம் சார் சொன்னார்.
இப்படி மதச் சண்டைப் போடுபவர்களுக்கு உண்மையிலே தங்கள் மதக் கொள்கைகளோ. தத்துவங்களோ தெரியாது. இப்படி மதச்சண்டைப் போட்டால் தங்கள் கடவுள் தங்களை ஆசீர்வதிப்பார் என்ற தவறான எண்ணம் கொண்டு இருக்கிறார்கள்…” ஒய்வு பெற்ற மின்துறை அதிகாரி ஸ்டிபன் சார் சொன்னார்.
கடவுள் உண்டு என்பதும் இல்லை என்பதும் சபைக்கு உதவாத வெறும் பேச்சு என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மிக அருமையாக சொல்லியிருக்கிறார். நம்ம நாட்டுக்கு மத நம்பிக்கை அவசியமில்லை மனித அன்புதான் தேவை. அது தான் மனித சமுதாயத்தை முன்னேறச் செய்யும்…” சமர்தர்மக் கொள்கை அடிப்படையில் கூறினார் எழுத்தாளர் பெருமாள் இவர் இரண்டு கதை தொகுப்பினை வெளியிட்டவர். அன்பானவர் அனைவரையும் குறிப்பாக அந்த முதியவர் கூட்டத்தை தன் எழுத்து வல்லமையினால் கட்டிப் போட்டவர்.
இதுவரை அமைதியாக இருந்து கவனித்துக் கொண்டிருந்த ஒரு புதியவர்.“நான் கூட சார் சொன்னதை ஆதரிக்கிறேன் இன்று மனிதநேயம் தான் அவசியம். மதங்கள் மீது கொண்ட வெறியல்ல…”
அனைவரும் அந்த புதியவரை பார்த்தனர் ஐயம் சாரி என்னுடைய பெயர் மாசில்லாமணி மனதத்துவ பேராசிரியர் திருச்சியில் மனநல மருத்துவமனை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த ஊரில் திருமதி. ஞானம் கோவில்பிள்ளை என்பவர் என் சொந்த சகோதரி.
அவங்க மகளுக்கு நாளைக்கு கல்யாணம் அதுக்hக வந்திருக்கிறேன்..டாக்டர் மாசில்லாமணி தன்னைப் பற்றி சுருக்கமாக அறிமுகப்படுத்திக் கொண்டார்.
பேசிக் கொண்டிருந்தவர்களை இடித்துக்கொண்டு வந்தாள் ஒரு பெண். அவளுடைய இடுப்பில் தண்ணீர் நிறைந்த பிளாஸ்டிக் குடம் யாரிடமும் எதுவும் பேசாமல் குடத்திலிருந்த தண்ணீரை அங்கிருந்த செடிகளுக்கு ஊற்றினாள்.
பார்க்க முப்பது வயதிருக்கும் சற்று கருத்தமேனி கடமையை செய்யும் வெறிஎன்ன கமலா செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வந்தாயா?” பேராசிரியர் காசிராசன் கேட்டார்.
ஆமாம் என்பது போல் தலையசைத்துவிட்டு எதுவும் நடக்காததுபோல் மீண்டும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிக்க சென்றாள்.
யார் இந்த பெண்? இப்படி இன்டிசன்டாக நடந்து கொள்கிறாள்?” டாக்டர் மாசில்லாமணி கேட்டார்.
இந்த பெண். கொஞ்சம் பைத்தியம் என்னுடைய பழைய மாணவி. கமலா. அது ஒரு கதை டாக்டர். பேராசிரியர் கவலையோடு அணைவரையும் பார்த்துவிட்டுக் தொடர்ந்தார்.
நான் பணியாற்றிய கல்லூரியில் கமலா பைனல் இயர் படித்துக் கொண்டிருந்தாள். ஒழுக்கமான பெண் அவளை ஒரு தலையாக ரவி என்ற மாணவன் காதலித்திருக்கிறான். ஒரு நாள் வரம்புமீறி அவளிடம் ஏதோ சேட்டை செய்திருக்கிறான். அவள் அவனுடைய கன்னத்தில் ஒங்கி அடித்துவிட்டுஇனி என்னிடம் தவறாக நடந்தால் நடப்பது வேறு…” என எச்சரித்திருக்கிறாள்…”
அடடா ஒரு நாவல் படிப்பதுபோல் இருக்கிறது சார். மேலே சொல்லுங்கள் என ஊக்கப்படுத்தினார் டாக்டர்.
சேக்ஸ்பியர் சொன்துபோல் வாழ்க்கையே ஒரு முட்டாளால் சொல்லப்பட்ட கதை தானே! டாக்டர்! கமலா மூன்றாம் ஆண்டு தேர்வு எழுதியதும் அவளுடைய விதவை தாய் அவளுக்கு திருமணம் பண்ணி வைத்தாள். மணமகன் மாணிக்கம் திருநெல்வேலியில் ஒரு கம்பெனியில் அக்கௌன்டராக வேலைப் பார்த்துக் பொண்டிருந்தான். தினமும் இங்கிருந்து இரயிலில் தான் வேலைக்குச் சென்று வருவான். மணவாழ்வு மிக இனிமையாக போய்க் கொண்டிருந்தது ஆனால் ஒருநாள்…”
ஒருநாள் பிளிஸ் தொடர்ந்து கதையைச் சொல்லுங்க தலைமை ஆசிரியர் விஜயராஜ் சொன்னார்.
கமலாவின் கணவர் ஒருநாள் காலைப் பணிக்காக இரயிலில் பயணிக்கும்பொழுது அடுத்த ஸ்டேசனில் இரயில் நின்றது. ஒரு வாலிபன் பெட்டி படுக்கையோடு ஏறி மாணிக்கம் அருகில் அமர்ந்தான்.
சார் திருநெல்வேலியில் இறங்கி உடனே அடுத்த இரயில் பிடித்து பம்பாய் போகணும். சார் நான் என்னுடைய மடிக்கணினியைப் பார்த்தால் உங்களுக்கு தொந்தரவாக இருக்காதே? எனச் சொன்னவன். தன் மடிக்கணினியை இயக்க ஆரம்பித்தான். மாணிக்கத்தின் பார்வை அந்த மடிக்கணினி மீது பாய்ந்தது.
அதில் நிச்சயமாக அவளோடு படித்த ரவிதானே! சரியா?” எழுத்தாளர் பெருமாள் மகிழ்ச்சியுடன் கூறினார்.
கரெட். அது ரவிதான் ஊரைவிட்டு போகிறவன் மாணிக்கத்தைப் பார்த்ததும் அந்தப் பெட்டியில் ஏறி கமலாவை பழிக்கு பழிவாங்க ஏற்கனவே செயற்கையாக கிராபிக்ஸ் உதவியுடன் ரவியும் கமலாவும் காதல் திருவிளையாடல் செய்வதுப்போல் மடிக்கணினியில் பதிய வைத்திருந்தான்.
அவமானம் அவனை வாட்டியது. வேதனை அவனை விரட்டியது: அவனால் பேச முடியவில்லை. சிந்தனை அவமான சிறையில் சிறைபிடிக்கப்பட்டது. அந்த மடிக்கணினியை பார்த்ததிலிருந்து சிலையாக நின்றான். கமலா ஏற்கெனவே கற்பிழந்தவளா?
அன்றிலிருந்து மாணிக்கம் கமலாவிடம் பேசுவதில்லை.. காரணம் கேட்டு எத்தனையோ முறை கண்ணீர் விட்டிருக்கிறாள் பதிலில்லை!
மகளின் வாழ்க்கையில் ஏற்ப்பட்ட பிளவு கமலாவின் தாயார் இதயத்தை தாக்கியது. அந்த கைம்பெண் எந்த விடையும் தெரியாமல் மாரடைப்பில் இறந்தாள்.
இப்பொழுது கமலா தனிமரம்!
மாணிக்கம் எதையும் சீர்தூக்கி பார்க்க தெரியாதவன். உள்ளத்தில் வரட்டு கௌரவமும் பழிவாங்கும் உணர்ச்சியும் உடையவன்.
கமலாமீது கொண்ட வெறுப்பு அவனை இன்னொரு பெண்ணை மனைவி ஸ்தானத்தில் கொண்டு வரச் செய்தது.
அதைக் கண்ட கமலாவின் மனம் பேதலிக்க ஆரம்பித்தது. வறுமைää ஆதரவு இன்மை செய்யாத குற்றத்திற்கு தண்டனை அவளை பைத்தியமாக்கியது.
ஆமாம் ஏன் இவள் செடிகளுக்கு மரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறாள்? டாக்டர் வினவினார்.
அதற்கு நான் தான் காரணம்.. நான் பள்ளியில் பணியாற்றிக் கொண்டிருக்கும் பொழுது சமூக சேவைக்காக மாணவிகளை அழைத்துச் சென்று மரக்கன்றுகளை நடச்செய்து தண்ணீர் ஊற்றச் செய்வேன் கமலா என் மாணவியாக இருந்ததால் இப்பொழுதும் மனநோய் பிடித்திருந்தாலும் அதே சமூகப்பணியை செய்கிறாள்…” என்றார் தமிழாசிரியர் ராசன்.
சரி இப்போது இந்த பெண்ணுக்கு சாப்பாடு தங்குமிடம் யார் கவணிக்கிறார்கள்…” டாக்டர் வினவினார்.
நாங்கள் தான் பரிதாபப்பட்டு அதோ அந்த சர்ச் கன்னியாஸ்திரிகளிடம் இவளுடைய சோக கதையைச் சொல்லி இவளுக்கு புகலிடம் ஏற்படுத்தினோம்…” என ஸ்டிபன் சார் பதிலளித்தார்.
அதுவரை அமைதி காத்த ஜெ.கே.ஆர் டாக்டரைப் பார்த்து டாக்டர் ஒரு உதவி இந்த பெண்ணை உங்கள் மருத்துமனையில் சேர்த்து குனமாக்க முடியுமா..? நாங்கள் சிகிச்சைக்கான பணத்தை தந்து விடுகிறோம்.” என்றார்.
தூரத்தில் இரயில் வரும் சத்தம் கேட்டது அதுவரை சோகமாக இருந்த கமலாவின் முகம் மலர்ந்தது. தன் கூந்தலையும் உடையையும் சரி செய்துக் கொண்டு ரயில் நிலையத்திலிருந்த தூனுக்கு பின் ஒளிந்துக் கொண்டு இரயில் வண்டியிலிருந்து வெளியே வருபவர்களை கவனிக்க தயாரானாள்.
பேராசிரியர் சார் இதுக்கு என்ன அர்த்தம்?” – டாக்டர் கேட்டார்.
இவளுடைய கணவன் திருநெல்வேலியில் வேலைப் பார்க்கிறான். தினசரி இந்த இரயில் தான் வருவான் அவனைப் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு…”
இரயில் ஸ்டேசனை வந்தடைந்தது. பயனிகள் இரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்தனர்.
கமலாவின் கண்கள் அவளுடைய கணவன் மாணிக்கத்தை தேடின. அவனைக் கண்டதும் அவள் முகத்தில் புன்னகை! முகம் பிரகாசமடைந்தது.
டாக்டர் மாசில்லாமணி ஜெ.கே.ஆரை பார்த்தார்.
இவளுக்கு என்னால் சிகிச்சை கொடுக்க முடியாது.
ஏன் டாக்டர்…” அங்கிருந்த வயோதிக வாலிபர்கள் கேட்டார்கள்.
டாக்டர் மிக தீர்க்கமாக கூறினார்.
இவளுக்கு சிகிச்சை அளித்து குணமாக்கினால் இவளுக்கு இன்னும் அதிக சிக்கல்கள் உண்டாகும். முதலாவது இவளுடைய கணவன் இவளை ஏற்றுக் கொள்ளமாட்டான். இப்பொழுது பாதுகாப்பாக தங்க இடமும் உணவும் கிடைக்கின்றன. அவளுக்கு ஆதரவாக கன்னியாஸ்திரிகள் இருக்கிறார்கள். தினசரி தன் கணவனைப் பார்த்து அவள் மனம் பரவசமாகிறது. உங்களுடைய அன்பான கவனமும் போய்விடும். எனவே இவள் இப்படி மனநோயோடு இருப்பதுதான் அவளுக்கு நல்லது என்றார் மனநலமருத்துவர்.
சிந்தித்துப் பார்க்கும்போது மற்றவர்களுக்கும் அதுவே சரியாகப்பட்டது.
டாக்டரின் வார்த்தையை ஆமோதித்த அனைவரது பார்வைகளும் அந்தப் பெண்ணை நோக்கித் திரும்பியது.
அவள் மறுபடியும் தண்ணீர் ஊற்ற ஆரம்பித்திருந்தாள்.

தொடர்ந்து ஊற்றிக் கொண்டிருப்பாள்.
            ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.

Wednesday, March 5, 2014

முடிவே……முடிவாகாது

உண்மை கதை.  எழுதியவர் தா. ராசாமணி

“மனம் தன்னுடைய நிலையில், அதுதானே நரகத்தை சொர்க்கமாகவும், சொர்க்கத்தை நரகமாகவும் உருவாக்க முடியும்”-மில்டன் 

மப்பும் மந்தாரமுள்ள இரவு. எங்கும் நிசப்தம், இடை இடையே மெல்லிய ஒளிக் கீற்றான மின்னல்கள். 

இரவு மணி ஒன்று என்று பெரிய சப்தத்தை எழுப்பி தன் கடமையைச் செய்து கொண்டிருந்தது மாதா கோவில் கடிகாரம். 

எனக்கு தூக்கம் அன்று ஏனோ வரவில்லை! நான் எவ்வளவோ முயற்சித்தாலும் தூக்கம் என் கண்களுக்கு வரவில்லை. 
பக்கத்து அறையின் என் மனைவியும் குழந்தைகளும் உறங்கிக் கொண்டிருந்தனர்……

அந்த இரவின் மயான அமைதியை கலைப்பது போல் என் வீட்டின் தொலைபேசி ஒலித்தது. 

என்னருகில் தொலைபேசி இருந்ததால், நான் அதை என் காதில் வைத்து….. “ஹலோ…பேராசியர் சந்திரன்…”என்றேன். 

“சார் நான் உங்கள் பழைய மாணவி வசந்தி பேசுகிறேன்….” 

“வசந்தியா….யாரும்மா……!இப்பொழுது எங்கள் கல்லூரியில் படிக்கிறாயா…? 

“சார்….நான் 2008யில் நம்ம கல்லூரியில் பட்டபடிப்பு முடித்தேன் சார். உங்கள் மாணவி சார்…..கல்லூரியில் எல்லா போட்டிகளிலும் குறிப்பாக பரத நாட்டியத்தில் கலந்து பரிசுகள் பெற்றி இருக்கிறேன்……நான் அப்பொழுது என் குடும்ப சூழ்நிலைகளை உங்களிடம் சொல்லி இருக்கிறேன்…..நீங்கள் எனக்கு ஆறுதல் சொல்லி இருக்கிறீர்கள்……சார்”  

“ஆமாம்….ஆமாம்…..இப்பொழுது தான் ஞாபகம் வருது….பல்கலைத் தேர்வில் நீ தங்கப்பதக்கம் கூட பெற்றாயே….! 

“ஆமாம்…..சார்……நான்தான் சார்….. 

“இப்பொழுது என்ன காரியமா இரவு ஒரு மணிக்கு போன் செய்கிறய்…..?” 

“சார்…..என்னுடைய வாழ்க்கையின்….கடைசி மணித்துளிகளில் இருக்கிறேன்…. ஆமாம்…..சார்…..நான் தற்கொலைச் செய்துக் கொள்ள போகிறேன்.  அதற்கு முன் உங்களிடம்….என் கவலைகளை, வேதனைகளைச் சொல்ல வேண்டும் என நினைத்தேன்….சார்……தயவுசெய்து உங்களை தொந்தரவுபடுத்துவதற்கு மன்னியுங்கள்…..சார்…..எனக்கு அம்மா….அப்பா….அல்லது சகோதரிகள், சகோதரர்கள் எனக்கு யாரும் இல்லை…..அதனால் தான் நான் என் வாழ்வின் கடைசி முடிவில் உங்களிடம் பேச விரும்புகிறேன்…’. அவள் சற்று நிறுத்தினாள். அவள் அழுதுக் கொண்டிருக்கிறாள் என்பதை அவளுடைய விம்மலின் ஒலி மூலம் அறிந்துக் கொண்டேன். 

அவளுடைய கவலைத் தோய்ந்த பேச்சைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன். 

வாழ்வின் முடிவில் ஒரு பெண்; அதுவும் என்னிடம் பேச விரும்புகிறாள்… எனக்கு ஒன்றும் ஒடவில்லை இதயம் படபடத்தது. வியர்வை உடம்பை நனைத்தது. 

வசந்தி ஒரு அருமையான, என் அன்புக்கு பாத்திரமான மாணவி… ஒழுக்கத்திலும் படிப்பிலும், பரத நாட்டியத்திலும் சிறந்து விளங்கியவள் அவள் கல்லூரியில் படிக்கும் பொழுது அவளுடைய அம்மா உயிரோடு இருந்தார்கள்.  கூலி வேலைகளைச் செய்து கொண்டே தான் மகளை படிக்க வைத்துக் கொண்டிருந்தார்கள்…….இன்று உயிரோடு இல்லை போலும்…..!  

“அம்மா…..வசந்தி…..அழாதே…..!ஏன் தற்கொலை?ஏன் இந்த அதிதீவிரமான முடிவுக்கு வந்திருக்கிறாய்…..?கவலைப்படாதே….!எல்லாம் சரியாய் போய்விடும்…..!”   

“இல்லை சார்…..என் நிலை இனி சரியாகாது…..இனி என் வாழ்க்கையில் எனக்கு எந்த பிடிப்பும் இல்லை…..
“ஆமாம்…..உனக்கு கல்யாணம் ஆகிவிட்டதா?”-அவளுடைய மனதை மாற்ற இந்த கேள்வியை கேட்டேன். 

“நான் கல்லூரி படிப்பை முடித்ததும், வேலைத் தேடிக் கொண்டிருக்கும் பொழுது தான் இந்த மாப்பிள்ளையை என் அம்மா பார்த்தார்கள்.  எங்களைவிட பணக்காரர், அழகானவர், படிப்பு சுமார். என் அம்மாவுக்கு இந்த மாப்பிள்ளையை பிடித்துவிட்டது ரொக்கம் வேண்டாம் என்றார்கள். நான் வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும், இப்பொழுது திருமணம் வேண்டாம் என என் அம்மாவிடம் கூறினேன், ஆனால் என் அம்மா இந்த திருமணத்திற்கு அவசரப்படுத்தினதால், நான் சம்மதித்தேன்” 

“திருமணம் செய்துக் கொள்ளுவது நல்லதுதானே அம்மா…..!அதைதான் உன் அம்மா உனக்கு செய்திருக்கிறார்கள்….”நான் சொன்னேன்.      

“நானும் அப்படி நினைத்து தான் திருமணத்திற்கு சம்மதித்தேன்.  ஆனால் திருமணம் ஆன சில மாதங்களுக்கு பின் தான் அந்த ஆள்- என் கணவரின் நடவடிக்கையை அறிந்தேன்.  சரியாக வேலைக்கு போவதில்லை, சரியான குடிகாரர், மேலும் பல பெண்களின் தொடர்பு…..”  

“அட…..அட….அவர் ஓழுக்கமான ஆள் இல்லை….அப்படிதானே…..?”-நான் கேட்டேன்.

“ஆமாம் சார்…..சில பெண்களை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வருவார்…..நான் அவர்களுக்கு சமையல் செய்ய வேண்டும்…..என்னிடம் அன்பாக இருப்பதில்லை…. கடந்த ஆறு மாதமாக இந்த துயர நிகழ்ச்சி நடைப்பெற்றிருந்தது. 
“மேலும்……”-அவள் சற்று தன் பேச்சை நிறுத்தினாள்…..       

“மேலும்…..என்னம்மா……”-நான் கேட்டேன்.

“மேலும்…..நான் போட்டிருந்த என் நகைகளை எல்லாம் விற்று விட்டார்…. என்னை ஒரு அடிமைபோல் நடத்தினார். என்னால் தாங்க முடியாத நிகழ்ச்சி இந்த இரவு நடைபெற்றுள்ளது…..”

“அது என்னம்மா…..!”

அவரும்-அந்த விலைமாதுவும் ஒன்றாய் காமகளியாட்டதில் ஒன்றாய் இருப்பதை நான் பார்க்க வேண்டுமாம்…..அது அவருக்கு அதிக “கிக்” தருமாம்…நான் மறுத்தேன்…எனக்கு “அடி உதை…..”அவர்கள் பக்கத்து அறையில் இருக்கிறார்கள்… நான் என் வாழ்வை முடித்துக் கொள்ள ஒரு கயிற்றை எடுத்து பேனில் மாட்டிக் கொண்டேன்…அந்த நிலையிலிருக்கும் பொழுது தான் உங்கள் நினைப்பு வந்தது…என் கல்லூரி நாட்களில் மாணவ மாணவிகளுக்கு எவ்வளவு அறிவுரைக் கூறினீர்கள் மாணவர்களான எங்களை நேசித்தீர்கள்.  எனவே இந்த என் வாழ்க்கையின் முடிவில் உங்களோடு பேச விரும்பினேன்…..”

“அம்மா…ஒரு முடிவு எப்பொழுதும் நிரந்தர முடிவாகாது. தயவு செய்து…சற்று யோசித்துப்பார்…நீ உன் வாழ்வை முடித்துக் கொள்ளுவதால் உன் கணவனுக்கு தான் முழு சுதந்திரம் கிடைக்கும்…உனக்கு தான் உன் வாழ்வு நஷ்டமடையும்…எனவே தற்கொலை முயற்சியை உடனே நிறுத்து….”நான் பதட்டதோடு கூறினேன் “இல்லை சார்…..இனி நான் உயிரோடு இருந்து எந்த லாபமும் இல்லை….இந்த உலகத்தில் எனக்கு யாரும் இல்லை…..மரணம் ஒன்றுதான் என்னைப் போன்ற அனாதைகளுக்கு நல்லதொரு தீர்வு……!நிரந்தர தீர்வு…..”உங்களிடம் பேசியதால்…..மாணவர்களின் அன்புக்குறிய – குறிப்பாக எனக்கு அன்பான என் ஆசிரியரிடம் எல்லாம் கடைசியாக கூறிவிட்டேன்…..இனி என் நெஞ்சின் பாரத்தை இறக்கி வைத்த மகிழச்சியுடன் நான் தற்கொலைச் செய்துக் கொள்ளுகிறேன்…..இவ்வளவு நேரம் என் சோக கதையை பொறுமையாக கேட்டதற்கு நன்றி சார்…..குட்பை……”
வசந்தி போனை கீழே வைக்க முற்பட்டதை அறிந்து மிக அவசரமாக… “வசந்தி…..வசந்தி…..”என சத்தமாக கூப்பிட்டேன். இறப்பின் விளும்பில் இருக்கும் ஒரு பெண்ணின் கடைசி வார்த்தைகள் என்னை….என் உள்ளத்தை உடைத்துப் போட்டன…..! “என்ன சார்….”ஈனக்குரலில் வசந்தி பதிலளித்தாள்.

“வசந்தி…..இவ்வளவு நேரம் நீ பேசினாய்…..எனக்கு சற்று சில நிமிஷங்களைக் கொடு…..அதுதான் என் வேண்டுகோள்…..!வசந்தி…..நீ உன் பேராசிரியருக்கு கொடுக்கும் கடைசி மரியாதை இதுதான்…..போனை அவசரப்பட்டு வைத்துவிடாதே…..”நான் சற்று பதட்டதோடு பேசினேன்.               

“என் அன்பான பேராசிரியர்க்கு நான் கொடுக்கும் மரியாதை இது வென்றால்… நீங்கள் பேசுங்கள் சார்…..”வசந்தி. 

“வசந்தி…..வாழ்க்கை என்பது நாம் விரும்புவதை எல்லாம் அனுபவிப்போம்…. கிடைக்கும் என எண்ணக் கூடாது. வாழ்க்கை என்பதே பிரச்சனைகள் மத்தியில் வாழ்வது தான்…..மில்டன்…..என்ற கவிஞன் தன்னுடைய “பேரடைஸ் லாஸ்டு என்ற காப்பியத்தில் மிக அழகாக சொல்லுகிறார். “நம்முடைய உள்ளம் சரியான நிலையில் இருக்கும் பொழுது நாம் நரகத்தை சொர்க்கமாக மாற்றலாம். சொர்க்கத்தை நரகமாக மாற்றலாம்”. எல்லாம் நமது மனதைச்சார்ந்தது. கடலில் வாழும் மீன்கள் அழகாக குதித்து நீந்தி விளையாடும். அந்த மீன்களை பிடிக்க, மீனவர்களின் வலை வீச்சு, பெரிய மீன்கள் அந்த சிறிய மீன்களை பிடிக்க வாயைப்பிளத்துக் கொண்டு வரும்… ஆனால் அந்த சிறிய மீன்கள் மிக சாமத்தியாக தங்களுடைய விரோதிகளிடமிருந்து தங்களை காப்பாற்றிக் கொள்ளுகின்றன, அவை அறிவுள்ள மீன்கள். சில மீன்கள் “ஐயோ….!எவ்வளவு ஜீவ போராட்டமா?” என எண்ணி….சில வினாடிகள் கவலையால் துவளும் பொழுது மனிதன் விரிக்கும் வலைக்கும், பெரிய மீன்களுக்கும் இரையாக்கின்றன.

ஒரு அறிஞன் சொல்கிறான் “நம்முடைய விரோதிகள் நம்முடைய நரம்புகளை முறுக்கேற்றுகிறார்கள்” என்கிறார். 

“மன்னிக்கனும் சார்….நான் என் கணவரிடம் எவ்வளவோ போராடியிருக்கிறேன்.  அழுது பார்த்தேன்; கெஞ்சிப்பார்த்தேன்; கோபப்பட்டு பார்த்தேன். ஒரு பலனும் இல்லை. சார்…..எனக்கு யாரும் துணை இல்லாததால்…என்னை அதிகமாக சித்திரவதைச் செய்கிறார். தவிர எந்த நல்ல மாற்றமும் அவரிடம் காணவில்லை சார்……     

“வசந்தி….உன்நிலை எனக்கு நன்கு புரியுதும்மா. உன் கணவர் ஒரு சைக்கோ போல் செயல்படுகிறார் என நினைக்கிறேன்.  இந்த நிலையில்தான் நீ தைரியமாக ஒரு முடிவு எடுக்கனும் வசந்தி…நீ ஏதாவது வேலைக்கு போனால், நிச்சயம் உன் நிலை உறுதிப்படும்…உள்ளுரில் நீ ஏதாவது வேலைப் பார்த்தாலும் உனக்கு நல்லது என எண்ணுகிறேன்”.  

“உள்ளுரில் நான் கஷ்டப்பட்டு வேலைத் தேடினேன். வேலையையும் பார்த்தேன். ஆனால் நான் எந்த வேலைக்கும் போக கூடாது…அவருக்கு சமையல் மட்டும் செய்தால் போதும் எனக் கூறி, நான் வேலைப் பார்த்த இடங்களில் எல்லாம் தகராறு செய்து என்னை வேலையிலிருந்து நிறுத்திவிட்டார்…சார். இனி நான் உள்ளுரில் வேலைப்பார்க்க முடியாது சார்…வசந்தி தன் கண்ணீரின் கதையை எடுத்து கூறினாள்.  

“வசந்தி…நான் ஒரு முக்கியமான ஆலோசனைத்தரவா…?”-நான் கேட்டேன்.

“சொல்லுங்க சார்……”     
“வசந்தி…..உன் கணவன் இருக்கும் நிலையில் நாம் எதுவும்…..செய்ய முடியாது…..நீ தான் ஒரு முடிவு எடுக்கணும்….அதாவது உன் நிலையை விளக்கி உன் கணவனுக்கு ஒரு கடிதம் எழுதிவை. பின் சென்னையில் என் நண்பர் ஏற்றுமதி இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார். அவரிடம் போனால் உனக்கு நிச்சயம் உனக்கு ஒரு வேலைத் தருவார். நான் உன்னைப்பற்றி அவருக்கு போன் பண்ணி, உனக்கு வேலைத்தர சொல்லுகிறேன்…..என்ன சொல்லுகிறாய்? 

“வாழ்க்கையின் முடிவில் இருக்கும் எனக்கு வேலைப் பார்க்க விருப்பமில்லை சார்…..” 

“வசந்தி….மாணவர்கள் பொது தேர்வில் வெற்றிப் பெறாவிட்டால் அடுத்து வரும் தனித் தேர்வில் எழுதி வெற்றிப் பெறுவதில்லையா…..?எனக்காக இந்த முயற்சியில் இறங்கு….வெற்றி உனக்கு நிச்சயம்……!”  

“சரி…..சார்….முயற்சிச் செய்கிறேன்”-

“என் நண்பரின் விலாசத்தை குறித்துக்கொள், உனக்கு சென்னைக்கு போக பணம் இருக்கிறதா…..?” 

“இருக்கிறது சார்….உங்கள் நண்பரின் விலாசத்தை சொல்லுங்கள் சார்… அதிகாலை ஐந்து மணிக்கு சென்னைக்கு ரயில் இருக்கிறது சார். அதில் போகிறேன்…” 

நான் என் நண்பரின் விலாசத்தைக் கொடுத்து, அவளை சமதானம் படுத்தினேன்.  அவள் காலையில் ரெயிலைப் பிடித்திருந்தால், மதியத்திற்குள் சென்னை சென்றிருக்கலாம்…ஆனால் இதுவரை வசந்தியிடமிருந்தோ…என் நண்பரிடமிருந்தோ எந்த செய்தியும் வரவில்லை. அவள் சென்னை சென்றாளா? அல்லது தற்கொலை செய்துக் கொண்டாளா…..?தெரியவில்லை….”என கூறிய நான் அந்த ரயில்வே நிலையத்திற்கு வெளியே இருந்த சிமெண்ட் பெஞ்சுகளில் அமர்ந்திருந்த என் வயோதிக நண்பர்களை கூர்ந்து பார்த்தேன். 

“பேராசிரியர் சந்திரன் சார் நீங்கள் சொன்ன செய்தி துப்பறியும் கதையில் வரும் நிகழ்ச்சிப் போல் இருக்கிறது சார்…..”என்றார் முன்னால் தபால் துறை அதிகாரி சுவர்ணமாணிக்கம்…

“பெரிய சஸ்பெண்டாக இருக்கு சார்…! வசந்தி இப்பொழுது உயிரோடு இருக்கிறாளா? இல்லையா? அதுதான் இப்பொழுதுள்ள கேள்வி” எழுத்தாளர் ஆறுமுகப்பொருமாள் சொன்னார்…

“பெண்கள் சமுதாயத்தில் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது” என்றார் பேராசிரியர் காசிராஜன்…  

முதியோர்களின் உரையாடலை கலைப்பது போல் பேராசிரியரின் செல்போன் ரீங்காரமிட்டது….

முதியோர் அனைவரும் திகிலோடு பேராசிரியர் சந்திரனின் செல்போனின் உரையாடலை கவனிக்க தொடங்கினர். 

பேராசிரியர் செல்போனில் உள்ள ஸ்பீக்கரை “ஆன்” பண்ணிவிட்டு பேச ஆரம்பித்தார்… 

“சார்…நான் உங்கள் மாணவி வசந்தி பேசுகிறேன். 

“என்ன வசந்தி…உன்னுடைய போனுக்காக காலையிலிருந்து காத்துக் கொண்டிருக்கிறேன்…இனி விஷயத்தைக் சொல்லு…”     

“சார்…நீங்கள் சொன்னது போல் சென்னையில் உங்கள் நண்பரைப் பார்த்தேன். 

“அவருடைய கம்பெனியில் எழுத்தர் பணியை கொடுத்திருக்கிறார். மேலும் அவர் நடத்துகிற மன வளர்ச்சிகுன்றிய குழந்தைகளில் காப்பாகத்தில் எனக்கு தங்க இடம் அளித்திருக்கிறார். சார் இதுவரை வாழ்க்கையில் நான் தான் அதிகம் துன்பபடுகிறேன் என நம்பினேன். ஆனால் இந்த மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளை பார்க்கும் பொழுது நான் எவ்வளவோ பாக்கியசாலி…..ஆசீர்வதிக்கப்பட்டவள் சார்….மேலும் இந்த காப்பகத்தில் சனிகிழமை….ஞாயிற்று கிழமைகளில் நடனம் சொல்லிக் கொடுக்கிறார்கள்.  அந்த நடன வகுப்பில் என்னையும் ஆசிரியராக என்னை பணியாற்ற சொல்லியிருக்கிறார்…..”   

“அது சரி….இனி உன் குடும்ப வாழ்க்கை….. 

“சார் நான் பாரதி கண்ட புதுமை பெண். இனி எனக்கு இருந்த குடிகாரன் பெண் பித்தனோடு இருந்த மனைவி என்ற பந்தம் அறுந்து விட்டது சார்…நீங்கள் சொன்னது போல் ஒரு முடிவே முடிவல்ல, ஒரு முடிவு….இன்னொரு வாழ்க்கையின் ஆரம்பம் என்பதை கண்டுக் கொண்டேன். இந்த குழந்தைகள்…. மனவளர்ச்சி குன்றிய இந்த குழந்தைகள் தான் என் குழந்தைகள்…இந்த அருமையானபுதிய வாழ்வை அமைத்துக் கொடுத்த உங்களுக்கு என் இதய பூர்ணமான நன்றி சார்…..”  

“இறைவன் உன்னை என்றும் ஆசீர்வதிப்பார் என் மகளே….”என கூறிய பேராசிரியர் தன்போனை ஆப் செய்தார்.  

“மிக்க மகழ்ச்சி…சார்…ஒரு பெண்ணுக்கு புதுவாழ்வை ஏற்படுத்திய உங்களுக்கு எங்கள் நன்றி சார்”-என தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் அந்த முதியவர்கள். 

ஓய்வுபெற்ற ஆங்கில ஆசிரியரான எனது நண்பர் திரு  தா. ராசாமணி அவர்களுக்கு தமிழ்ச்சிறுகதைகள் எழுதுவதில் அலாதிப்பிரியம்.புதியத்தென்றல் என்ற இதழில் வெளிவந்த இந்தக்கதையே நட்புக்காக எனது தளத்தில் வெளியிடுகிறேன்.


தமிழாய் மாறிய ஆங்கிலம்

                      ஒரு மூலமொழியிலிருந்து கிளைத்து எழுவது பல மொழிகள் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பிட்ட ஒரு மொழி பேசும் இனமக்களின் ஒரு பிரிவினர் .வெவ்வேறு பகுதிகளில் குடியேறும் பொழுது அந்தந்த கால, இட, சூழ்நிலைக்கேற்ப அவர்களின் மொழி திரிந்தும், வேற்று மொழிக்கலப்பினாலும் புதிய மொழி உருவாகும்.

                ஆங்கிலத்தை எடுத்துக்கொண்டால் பல்வேறு மொழிகளிலும் உள்ளச் சொற்களையும் தமதாக்கிக் கொண்டது.தமிழிலிருந்தும் பல சொற்கள் ஆங்கிலத்துக்குச் சென்றுள்ளது. உதாரணம் அரிசி ரைஸ் இஞ்சி சிஞ்சர்.

                அதே போல் தமிழ்ச்சொற்களாய் மாறிவிட்ட பல ஆங்கிலச் சொற்கள் உண்டு.சென்னையில் உள்ள பார்பர்ஸ் பிரிட்ஜ் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். ஹாமில்டன் என்ற ஆங்கிலேயேர் கட்டிய பாலம் பேச்சு வழக்கில் அம்பட்டன் பாலம் என்று திரிந்து மீண்டும் அதை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தபோது பார்பர்ஸ்பிரிட்ஜ் ஆனது.

                அதே போல் சென்னையில் ஆங்கிலேயர் கடற்படையை ஏமாற்றி திடீர் தாக்குதல் நடத்திய எம்டன் என்ற நீர்மூழ்கி கப்பல் நடத்தியது. அதிலிருந்து மிக சாமர்த்தியமாக ஏமாற்றுவர்களுக்கு எம்டன் என்ற பெயர் தமிழ்நாட்டில் உருவாகியது.
               
                வில்லன் என்பது ஆங்கிலச் சொல். அதிலிருந்து உருவான வில்லங்கம் என்ற சொல் பத்திரபதிவுத்துறையில் பிரபலம். இங்கு அநேக  சொத்துக்கள் வில்லங்கத்தில் மாட்டித் தவிப்பது வேறு கதை.

                கிறிஸ்தவ நெறியில் ஆங்கிலச் சொற்களை பெயராக வைத்துக் கொள்வது அனைவரும் அறிவோம்.ஆனால் தென் மாவட்டங்களில் இரண்டு ஆங்கிலச் சொற்கள் இந்துக்களின் பெயர்ச் சொற்களாக மாறி விட்டதை அறிவீர்களாஅதுவும் அவை இரண்டும் இரண்டு தெய்வங்களை குறிக்கும் பெயர்ச் சொற்கள் ஆகும்.

பிரசித்தி பெற்ற காவல்தெய்வமான சுடலைமாடன் தனது பக்தருக்காக ஒரு வழக்கில் உயர்நீதிமன்றத்திற்கு வந்து சாட்சி சொன்னதாக ஒரு கதை உண்டு. ஹைகோர்டில் வந்து சாட்சி சொன்னதால் அவரின் மற்றொரு பெயரான மகாராஜனுடன் சேர்த்து ஐகோட்மகாராஜன் என்று அழைப்பதுண்டு. அவரின் பக்தர்கள் ஐகோட் மகாராஜன் என்று தமது குழந்தைகளுக்கு பெயர் வைத்து ஐகோட்டு என்று அழைப்பது வழக்கம்.

                அந்த பெயருள்ளவர்கள் தனது பெயரை HIGHCOURT என்று எழுதுவதில்லை.ICOT என்றோ IKOT என்றோதான் எழுதுகிறார்கள்.
               
                அதே போல் தமிரபரணி ற்றங்கரையில் ஏரல் சேர்மன் அருணாச்சலசாமி கோயில் உள்ளது.சென்ற நூற்றாண்டில் வாழ்ந்த அருணாச்சலம் என்பவர் நல்லொழுக்கமுள்ளவராக திகழ்ந்தவர். அவரது ஊரில் சேர்மனாக பதவி வகித்தவர் சிறு வயிதிலேயே இறந்துபோன இவர் பல அற்புதங்களை நிகழ்த்தினாராம். அவருக்குப்பின்னர் கோயில் எழுப்பப்பட்டு அக்கோயில் பிரசித்தி பெற்று விளங்குகிறது. அவரது பக்தர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சேர்மன் என்று பெயர் வைப்பது வாடிக்கையானது. அவர்கள் தங்கள் பெயரை ஆங்கிலத்தில் CHAIRMAN  என்று எழுவதில்லை. SERMAN என்று தான் எழுதுகிறார்கள்..        

                இன்னும் பல சொற்கள் இருக்கலாம் அறிந்தவர்கள் பதிவிடலாம்.

                 


Friday, September 27, 2013

விண்வெளி விண்வெளி

         
                   கி.பி.2100
அந்த நவீன விண்வெளி ஓடம் ஒரு புதிய உடுமண்டலத்தில் ஊடாக பயணித்துக்கொண்டிருந்த்து. அது ஒளியின் வேகத்தில் பயணிக்கும் திறன்கொண்டது. அந்த விண்வெளி ஓடத்தை இருவர்  செலுத்திக் கொண்டிருந்தனர்.
           ‘’நண்பா நமது பயணம் எப்போது முடியும்?
            ‘’இன்னும் நான்கு புதிய கிரகங்களில் இறங்கி ஆய்வுசெய்து நமது ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பிக்க வேண்டுமல்லவா?’’
             ‘’அப்படியானால் இன்னும் நான்கு மாதங்கள் ஆகிவிடும்’’
              ‘’அதோ ஒரு புதிய கிரகம் தெரிகிறது. அருகில் சென்று பார்ப்போம்’’
              விண்வெளி ஓடம் மெதுவாக அந்த புதிய கிரகத்தை நெருங்கியது.பெரும்பகுதி நீரால் சூழப்பட்டிருந்த அந்த கிரகத்தை சுற்றி வந்தது.
           ‘’தண்ணீர் இருப்பதால் உயிரினங்கள் வாழ சாத்தியக்கூறு உள்ளது. இன்னும் தாழ்வாக பறந்து பார்க்கலாம்’’
          ‘’அதற்கு முன் தற்காப்புகான ஆயுதங்களை அலெர்ட் செய்துகொள்வோம். எப்படிப்பட்ட உயிரினங்கள் வாழ்கின்றன என்பது தெரியாதல்லவா?’’
‘’சரியாகச் சொன்னாய்’’
     அனைத்தையும் ஆயத்தம் செய்துவிட்டு கிரகத்தின் நிலப்பகுதியில் தாழ்வாகப் பறக்கத் தொடங்கினார்கள்.
     நிலப்பகுதி முழுவதும் மிகப்பெரிய கட்டிடங்கள்,உயர்ந்த கோபுரங்கள் நிறைந்திருந்தன. ஆனால் அவை அனைத்தும் சிதிலமடைந்துபோய் கிடந்தன. உயிரினங்கள் ஒன்றையும் காணோம். ஆச்சிரியப்பட்டுப் போனார்கள்.
           ‘’சமீப காலத்தில்தான் அனைத்து உயிரினங்களும் அழிந்திருக்கின்றன போலும்’’
             ‘’’ஆம் அப்படித்தான் தெரிகிறது. தரையிறங்கி பார்ப்போமா?
             திடீரென்று விண்வெளி ஓடத்தில் அபாய விளக்கு சிகப்பு நிறத்தில் எரிந்தது. அபாய ஒலியும் ஒலித்தது
              கட்டுப்பாட்டு அறையிலிருந்து குரல் ஒலித்தது.
              ‘’கட்டுப்பாட்டு அறையிலிருந்து பேசுகிறேன் நீங்கள் மிகவும் ஆபத்தான கிரகத்துக்குள் நுழைந்திருக்கிறீர்கள். உடனே வெளியெறவும்’’
               .’’ஏன் என்ன விசயம்’’ 
  ‘’’ அதீத விஞ்ஞான வளர்ச்சியால்  சுற்றுச்சூழல் மாசுப்பட்டு அங்கே வாழ்ந்த உயரினங்களெல்லாம் அழிந்து விட்டன. உயிருக்கு ஆபத்தான ரசாயன வாயுக்களும்,கதிரியியக்கமும் கிரகம் முழுவதும் சூழ்ந்திருக்கின்றன.உடனே வெளியேறவும்.’’
               ‘’அப்படியா இந்தக் கிரகத்தின் பெயர் என்ன?’’

                                                ‘’ பூமி.

Friday, September 20, 2013

அம்மா தண்ணீர் குடிக்கலாமா?

‘போகிற போக்கை பாத்தால் தண்ணீரைக்கூட விலை கொடுத்து வாங்க வேண்டியிருக்கும் போல’ இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன்பு நகைச்சுவையாக இப்படி கூறுவதுண்டு. அது வெகுவிரைவிலேயே உண்மையானதுடன் ஏர் பார்லர் என்ற பெயரில் தூய்மையான காற்றை விலை கொடுத்து வாங்கி சுவாசிக்கும் காலமும் வந்துவிட்டது.
தண்ணீர் இன்று காசு கொட்டும் முக்கியமான தொழிலாக மாறிவிட்டது. எங்கும் தண்ணீர் பஞ்சம் இருக்கையில் இவர்களுக்கு மட்டும் தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறதோ தெரியவில்லை.
முறையான தரச்சான்று இல்லாமல் ஒழுங்காக சுத்திகரிக்கப்படாமல் பாட்டில் தண்ணீர் விற்பனை செய்யப்படுவதும் அதை அரசு அவ்வப்போது கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதும் தொடர்கிறது.
ஒழுங்காக முறையாக சுத்திகரிக்கப்பட்டாலும் அந்த தண்ணீர் உயிரற்ற நீர்தான் என்றும் இயற்கையான தண்ணீரில் இருக்கும் தாது உப்புகள் நீக்கப்படுவதாலும்,நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படுவதாலும் உடல் ஆரோக்கியத்து கேடு என்றும் ஹீலர் பாஸ்கர் போன்றவர்கள் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
  இந்நிலையில், அம்மா வாட்டர் என்ற பெயரில் அரசு தண்ணீர் விற்பனையை ஆரம்பித்துள்ளது.
ஒரு அரசின் கடமை என்ன?  நீதி, நிர்வாகம்,பாதுகாப்பு மற்றும் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதும் ஆகும். சுத்தமான குடிநீரை மக்களுக்கு விநியோகம் செய்யவேண்டியது ஒரு அரசின் பொறுப்பு ஆகும். அதை விடுத்து அரசே தண்ணீர் வணிகத்தில் ஈடுபடுவது தனது பொறுப்பை தட்டிக்கழிக்கும் முறையற்ற செயலாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் ஒவ்வொரு வீடுகளுக்கும் அவர்களின் தேவைக்கேற்ப சுத்திகரிக்கப்பட்ட நீர் உயர் அழுத்தத்தில் அரசு வழங்குகிறது. நாம் அந்த அளவிற்கு எதிர்பார்க்கவில்லை.
வெளிச்சந்தையில் அதிக விலைக்கு தண்ணீர் விற்கப்படும் நிலையில், புதிய நீர் ஆதாரங்களை கண்டறிந்து, புதிய திட்டங்களை தீட்டி அதில் முதலீடு செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்தால் அதற்காக பெருமைப்படலாம்.
அதைவிடுத்து நாங்களே குறைந்த விலைக்கு தண்ணீர் தருகிறோம் என்று கூறுவது வெட்கப்படவேண்டிய விஷயமாகும்.
ஏற்கனவே ஒரு தண்ணீர் விற்பனையில் அரசு அதிகம் சம்பாதித்து வருவதால் இந்த தண்ணீர் விற்பனையிலும் லாபம் பார்க்கலாம் என்ற எண்ணமா இல்லை நமது குடிமகன்கள் மதுவில் கலப்பதற்கு அதிக விலை கொடுத்து ‘வாட்டர் பாக்கெட்’ வாங்கி கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவும் நோக்கில் மலிவு விலையில் தண்ணீர் கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணமா தெரியவில்லை.
அரசு மது பார்களில் அம்மா வாட்டர் விற்கப்படுகிறதா அங்கு என்னவிலை என்று விபரம் அறிந்தவர்கள் கூறுவார்களாக!

 

Copyright @ 2013 சாத்தான்குளம் வாசகசாலை.